Sunday, January 15, 2017

பழைய பள்ளியில் என் நினைவுகள்

நானிந்தப் பள்ளியிலே பணிசெய்த நாளெல்லாம் என்நினைவில்
தேனாக இனிக்கக் கண்டேன் தெளிவுடனே நான்சொல்வேன்.
போன நாட்கள் போயினவே இன்னுமேன் முன்நினைவு
ஏனம்மா எனக்கேட்டால் என்னபதில் நான் சொல்வேன்? 

ஒன்றா இரண்டா அனுபவம் ஒருவரியில் சொல்வதற்கு?
நன்றே சற்றுநான் எண்ணிப் பார்த்தேன் நயமாகச் நானுரைப்பேன்.
ஒன்றே ஒன்று சொல்வேன் உங்கள் அனைவருக்கும்
இன்றும் என்நினைவில் இருப்பவை ஏராளம் ஏராளம்.

தலைமை ஆசிரியர் எனக்கொருநல் வழிகாட்டி தானென்பேன்
கலைபல கற்றநல் ஆசிரிய சோதரிகள் தம்மன்பை
அலைபோல அள்ளித் தெளித்த நாட்கள் அற்புதமே
மலையாக நின்றபலர் உருகி நதியாக உதவினரே.
 
இவையெல்லாம் இழந்து இன்று வேறுபள்ளி சென்றடைந்தேன்
சுவையற்றுப் போனாலும் சூழ்நிலை ஒன்றைக் கருதி
சுவைமேலும் மெருகுபட வேண்டுமென எண்ணினேன் இதைஏற்பீர்
அவையில் அமர்ந்துள்ள அனைவரும் ஆசிகள் வழங்கிடுவீர்.

நன்றியுடன் இருப்பேன் என்சொல்லை நாளும் நம்பலாம்
சென்றஇடம் புதிதெனினும் ஒன்றாகிப் பழகிவிட்டேன் பயமில்லை.
என்றும்இப் பள்ளியின் நினைவலைகள் என்னில் நிரந்தரமே
     சென்று வருவேன் விடைதாரீர் நன்றிகூறி நானமர்வேன்.

பெண்கள் இந்நாட்டின் கண்கள்



பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்பார்
      ஆனால் இதுவும் கொஞ்சம் வாயளவே.
அன்னை பராசக்தி வடிவம் என்பார்
      ஆற்றுத் தண்ணீரில் எழுதியே வைப்பார்.

என்னைக் காக்கும் தெய்வம் என்பார்
      வீட்டில் தினமும் திட்டித் தீர்ப்பார்.
சொன்னதை கொஞ்சம் கேட்க மறுத்தால்
       சட்டென காலால் எட்டி உதைப்பார்.

எண்ணிப் பார்த்தால் பெண்கள் நிலையோ
      ஏட்டிக்கு போட்டி சாட்டை அடிதான்.
திண்ணைப் பேச்சு எம்மிடம் இல்லை
      தொலைக்காட்சி தொடர்கள் துணை இருக்கே.
     
போதும் போதும் புகழ்ச்சியும் புலப்பமும்
     மீதி இருந்தால் நாளை பார்ப்போம்.
சூதும் வாதும் நமக்கினி வேண்டாம்
      சொல்ல நினைத்தேன் சொல்லி விட்டேன்.
    
இல்லப் பணிகள் ஏராளம் என்பேன்
     அலுவலகப் பணிகள் தாராளம் என்பேன்.
செல்லப் பிள்ளைகள் சேர்ந்து விட்டாலோ
     அல்லும் பகலும் ஓய்வே இல்லை.

வேதியல் முறையில் பெண்களை இனியும்
    பகுப்பாய்வு ஏதும் செய்திடல் வேண்டாம்.
நீதி வழுவாமல் நிஜத்தைப் பேசலாம்
    ஜாதியில் ஆண்பெண் பிரிவைத் தவிர்ப்போம்.

பெண்கள் எதிலும் சளைத்தவர் அல்ல
     முன்பின் பார்த்து பேசுவோம் இனிநாம்.
தன்நிகர் இல்லா தமிழகம் படைப்போம்
      இல்லப் பணிகள் இணைந்தே செய்வோம்.

அன்று பாரதி சொன்னார் என்றெல்லாம்
      வீரவசனம் ஏதும் வேண்டாம் கேளுங்கள்.
இன்று தேவையறிந்து சேவைகள் செய்வோம் 

            பாரததேசம் புகழுயர சபதம் எடுப்போம்.

Sunday, September 25, 2016

ஆயிரம்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள் அயலெழுத்து வந்துபுகல் என்ன நீதி?



25.9.2016-கவி அரங்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
காலை எழுந்தவுடன் படிப்பு இது பாரதி கண்ட கனவு
மாலை முழுதும் விளையாட்டு இதுவும் கவிஞன் ஆசை.
மாலை தொடுத்து வரவேற்க விழைந்தேன் காணேன் அவனை
சோலை தென்றலாய் தவழும் தமிழ் அன்னையே வாழியநீ!
அவை அடக்கம்
அரங்கம் அதிர அடுக்குச் சொற்கள் கூட்டி கவிதொடுத்து
பரங்கித் தலையான் போற்றும் ஆங்கிலச் சொல் தடுத்து   
கரங்கள் உயர்த்தி கத்திமுனைச் சொற்களால் புத்தி புகட்டும்
குரங்குப் பிடியாய் கவியரங்கம் நடத்தும் தென்னவரே வணங்கிடுவேன்.

  ** ஆயிரம்தான் உச்சரிப்பு மாறினும் தமிழுள் அயலெழுத்து வந்துபுகல் என்ன நீதி?**
தமிழுக்கு அமுதென்று பேரென்றால் அந்த தமிழேநம் உயிரென்போம்  
அமிழ்தத்தில் பொங்கிவரும் தேனெனில் அந்த தேன்கூடும் நாம்தானே. 
குமிழுக்குள் ஒளிரும்மின் இழையெனில் அந்த இழைக்குள்ளும் நாமே
நிமிடத்தில் எழுகின்ற கவியெனில் அக்கவிதைக்கு நாம் கருவென்போம்.

இன்றிங்கு ஒன்றுசொல்ல ஓடிவந்தேன் ஒருகனம் சிந்தித்துப் பாருங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் உச்சரிப்பு தமிழில் உண்டு.
தொன்று தொட்டு வளர்ந்த தமிழ் தொல்காப்பியன் கண்டதமிழ்
சென்றவிட மெல்லாம் செருபகை வென்று வெற்றிவாகை சூடும்தமிழ்.

ஆயிரம் உச்சரிப்பு மாறினும் தமிழில் தடுமாற்றம் இல்லை
பாயிரம் தந்தாலும் பங்கெடுக்க பிறமொழிபுக இடமில்லை இங்கு.
தாயிடம் மடிதவழ எமக்கு மட்டுமே இடமுண்டு யாரேதும்  
ஆயிரம்தான் சொன்னாலும் தமிழில் அயலெழுத்து வந்துபுகல் என்னநீதி?

அயல்மொழி ஆதிக்கம் கண்டு ஆத்திரம் கொள்ள வேண்டாம்
கயல்விழி பார்வையால் நம்தமிழை நாளும் காத்திடுவோம்.
வயல்வெளி தென்றலில் தமிழ்க் கவிதைகள் பல படைப்போம்
இயலிசை நாடகமென எதிலும் திகழும் தமிழுக்கு இணையில்லை.

பிறமொழி சொல்லும் ஒலியும் நம்மை அழித்திட அனுமதியோம்
அறவழி நம்வழி அவ்வழி என்றும் தமிழைக் காக்கும்.
திறவாத கதவையும் திறமிகு கவிதையால் திறக்கச் செய்வோம்
இறவாத வரம்பெற்று என்றென்றும் சிறக்கக் காண்போம் தமிழை.  
இங்கனம்
முனைவர் இரா. வரதராசன்

Saturday, September 3, 2016

கொலவெறியாம் கொலவெறி



கொலவெறி பாடலொன்று வந்ததம்மா திரையுலகில்

கொள்ளை அடிப்பது கோழையெனப் பட்டதம்மா நிஜவாழ்வில்.

கொலவெறி இன்று பாடலோடு நில்லாமல் சோதிக்கவும் துணிந்ததால்

இனவெறி மதவெறி இவ்விரண்டும் தோற்கக் கண்டோம் தோழா.