Friday, August 23, 2013

2013 - நான்காம் ஆண்டு மாணவியருக்கு வாழ்த்துக்கள்



மேடையில் ஏற்றி விட்டோம் இவரென்ன சொல்லப் போகிறாறோவென
ஆவலோடு இருக்கிறீர்களா வெளியே ஓடலாமென நினக்கிறீர்களா?
பாடறியேன் பாட்டறியேன் பள்ளிக்கூடம் நானறியேன் – இது அன்று;
பாடவும் செய்வேன் பாட்டெழெழுதவும் செய்வேன் – இது இன்று.
நான்காண்டு உழைத்துக் களைப்புற்ற அருமைச் செல்லங்களே– உம்மை
வாழ்த்திட தமிழ்க் கவிதை ஓடத்தில் பயணம் கண்டேன்.  
  
இந்தக் கவிதைச் சொற்களை எண்ணி ரசிக்கலாம்
காலமெல்லாம் சொல்லிச் சிரிக்கலாம்.
ரசனையும் சிரிப்பும் கலந்து விட்டால்
வசன கவிதையும் உம்மை மயங்க வைக்கும்.
காதுகளைக் கொஞ்சம் தீட்டிக் கொள்ளுங்கள் – கைவசம்
காகித அம்புகள் இருந்தால் அவற்றைப் பையில் பதுக்கி வையுங்கள்.

ஆண்டிறுதி என்றாலே சிலருக்கு உதறல் எடுக்கும்
ஏனென்று கேட்டால் ஏட்டிக்குப் போட்டி பதில் வரும்.
சிலர் சொல்வார் தேர்வுச் சனியன் வந்திடும் என்று;
பலர் சொல்வார் படித்துத் தொலைக்க வேண்டுமே என்று;
நான் சொல்வேன் சுமை இறங்கும் நாளின்று வந்ததென்று.
நீங்களென்ன சொல்லப் போகிறீர்? - செல்லங்களே சொல்லுங்கள்.

நானொன்று சொல்வேனென மெல்லக் கிசுகிசுக்கும் சொற்கள்
நாலுபேர் நாவினில் தவழ்வதை நயமாகச் சொல்லட்டுமா? – அப்பாடா
தொல்லை தீர்ந்ததென மெல்லும் வார்த்தைகள் ஒருபக்கம்
சொல்லி மாளாத இடைத் தேர்வுகள் இனியில்லையென மறுபக்கம்.
தொல்லை முற்றும் தீர்ந்ததென்ற பெருமூச்சு இன்னொரு பக்கம்;
இனியென்ன பட்டம்தானென காணும் கனவுகள் நாலாபக்கம் –  சரியா?

இல்லையில்லை இன்னும்பல உண்டென சொல்லத் துடிப்பர் சிலர்;
நல்ல வேளை நானே அறிந்ததை நாலிரண்டு இன்னும் சொல்வேன்.
ஏனின்று வகுப்பிற்கு தாமதமென யாருமினி கேட்க மாட்டார்;
நானிங்கு கத்துகிறேன் தூக்கமா உனக்கென யாரும் கேளார்:
என்ன சொல்லியும் ஏறவில்லையா? இப்படி யாரும் கேளார்:
எக்கேடு கெட்டாலும் எனக்கென்னவென இனி யார் சொல்வார்- சரிதானே?

கவிதையால் சொற்களை அடுக்கி, அழகுபடுத்தி அலங்கரித்து
சிரிக்கவும் வைக்கலாம் சிந்திக்கவும் வைக்கலாம் – சுருக்கமாய்
சொல்லும் பொருளும் இணைந்து வள்ளள்களை வாழ்த்துவது மரபு.
இங்கு யார் வள்ளல் என்கிறீர்களா? – தயக்கமே வேண்டாம்
நன்கு வளர்ந்து வரும் நம் கல்லூரியின் நிறுவனர் சங்கர்தானே? 
இங்குமக்கு செவிலியர் பட்டம் பெற உதவிய நடுவரும் வள்ளலன்றோ.

இருண்டவன் கண்ணுக்கு அரண்டதெல்லாம் பேயென்பார் சிலர்
இருளில் நடக்கக் கற்றுக் கொண்டால் இரவேது பகலேது?
இரண்டாயிரத்து பதிமூன்றில் நாமின்று பயணிக்கிறோம்;
இது சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டென்பார் – நடப்பில்
குடிக்க தண்ணீரும் காணோம் பசுமை வயல்களும் காணோம்; 
இனிவரும் நாட்களை எண்ணி நோகின்றோம் உதவிட யாருமில்லை.

அண்டை மாநிலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடக்கண்டோம்;
அருமைத் தமிழ்நாட்டில் கண்ணீர்தான் சிந்தக் கண்டோம்.
நமக்கா தண்ணீர் பஞ்சமென்பார் சிலர் உண்மைதான் - ஆனால்
வேறு தண்ணீர் இது வேறு தண்ணீர் இரண்டும் ஒன்றல்ல.
ஒருகுவளை தண்ணீர் ஊற்றி, கைகால் நடுங்க, நாவுழற
நடுரோட்டில் புரளும் நாட்களை எண்ணி நோவதால் என்ன பயன்?

வாழ்த்துச் சொல்ல வந்தநான் தடம் புரண்டு பேசுகின்றேனா?– இல்லை.
ஆழ்ந்து சிந்திக்க உம்மைக் கைகூப்பி அழைக்கின்றேன் – இனிவரும் நாட்களில் மதுவை ஒழிப்போம் நம் மாண்பினைக் காப்போம்.
தெருவெங்கும் இதை எடுத்துக் கூறுவோம் - எனெனில்
உங்கள்கைகள் உரமிகுந்த கைகள் ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள்.
தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டின் பொருளை மாற்றிக் காட்டுங்கள்.

வாழ்க வளமுடன்! தேர்வில் அனைவரும் தேர்ச்சிபெற்று
வாழ்வில் அனைத்து வளமும்பெற ஆசிகள் ஆயிரம்.
உங்கள் வெற்றியில் எங்களுக்கும் பங்குண்டு – வரலாற்றில்
உங்கள் வெற்றி ஒரு மைல்கல் ஆகட்டும் - இதையே
மெட்ரிக் முறையில் கிலோமீட்டர் கல்லென்று
சற்று மாற்றிச் சொன்னாலும் சரிதான் மறுக்க மாட்டேன் - ஏனெனில்
சட்டி ஓட்டையானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரிதானே!. 

மீண்டும் என் வாழ்த்துக்கள்! நன்றி! வணக்கம்!  
                           * * *
=>22. 08. 2013 அன்று RASS ACADEMY NURSING கல்லூரி நான்காமாண்டு மாணவியர்கள் விடைபெறும் விழாவில் வாசித்தது.