Sunday, August 7, 2016

தமிழ் எழுத்தால் முடியாதா? தனித்தொலித்தால் விடியாதா?



உன்னால் முடியும், என்னால் முடியாதா என்பதெல்லாம்
இந்நாளில் எனக்கு மட்டுமல்ல தங்கமே – உனக்கும்தான்.
தமிழுக்கு அடிமை நானென்பார் ஆனால் தனித்தமிழைத் தள்ளி வைப்பார்,
தமிழுக்கு அமுதென்று பேரென்பார் இதுவும் வெறும் வாய்ச்சொல்லே.

தனித்தமிழ் வேண்டுமென்பார் தமிழோடு வேற்றுமொழி சேர்த்திடுவார்,
இனிமைதான் என்றாலும் தனிமையில் வலிமை இல்லை என்பார்.
வணிகப் பலகைகள் தமிழில் இருந்தால் மதிப்பில்லை என்பார்,
மணியான தமிழ்மறந்து ஆங்கிலத்தில் அதைப் படைப்பார்.

எதையும் வெறும் வாயால் சொன்னால் நம்புவார் யாருமில்லை,
இதையும் சான்றுடன் சொன்னால்தானே சபையேறும்? – இதோ சான்றுகள்.
பழச்சாறு கடையதனை ‘ஜூஸ் சென்டர் என்பது ஏனோ? – மதுவில் மயங்கி
மதுக்கடை என்பதை மறந்து ‘ஒயின்ஷாப்என்பதும் ஏனோ?

சிதைந்த மொழியில் ‘ஓம் என்பதை ‘OHம் என்றும் SIVA என்பதை ‘சிVA என்றும் வதைக்கும் இருமொழி கலப்புச் சொல்லில் என்னதான் கண்டனரோ?
தனித்தொலிக்கும் பெருவலிமை தமிழுக்கும் உண்டன்றோ! – போதும்
இனியும் தமிழெழுத்தால் இயலாதெனச் செப்பினால் தமிழ் அழிந்தே போகும்.   

நகரத்தோடு னகரணகர வேறுபாடுகள் வெறும் விளையாட்டல்ல
லகரத்தோடு ழகரளகர அலங்காரம் வேறெந்த மொழியிலுண்டு? -தங்கமே
தமிழ் எழுத்தால் முடியாதெனில் எம்மொழிக்கும் அவ்வலிமை இல்லை
தனித்தொலித்தால் விடியாதென்ற எண்ணத்தைத் தகர்த்திடுவோம். 
                             * * *
காமாராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாமதுரை கவிஞர் பேரவை சார்பாக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் பரிசுபெற்ற கவிதை. 
"கவி பாரதி" என்னும் பட்டத்துடன் சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. நாள்: 27.07.2016.

பூமகளே நீயின்று குளிர்ந்தாய்



பூமகளே நீயின்று குளிர்ந்தாய் – ஆனாலும்
நீமட்டும் குளிர்ந்தால் போதுமா?
ஏனிப்படி கேட்கிறேன் தெரியுமா? உன் கருணையின்றி   
எப்போதோ குளம் வற்றி பருகத் தண்ணீரின்றி தவித்தேன்.
இப்போது உன்னில் நனைந்து மகிழ்கிறேன் – இது என்
தப்பாத அங்கப் பிரதட்சனம் என்பேன்.
இன்னும் பொழிவாய் இது போதாது தாயே .
நாவரட்சி நீங்க பருகும் நன்ணீர் ஊற்றெடுக்குமா உன்னில்?

தமிழ் எழுத்தால் முடியாதா? தனித்தொலித்தால் விடியாதா?


< தமிழ் எழுத்தால் முடியாதா? தனித்தொலித்தால் விடியாதா? >

தமிழெழுத்தால் முடியாதா? தனித்தொலித்தால் விடியாதா? - இத்தலைப்பு
அமிழ்தமாய்ப் பட்டாலும் கன்னத்தில் அறைந்தாற்போல் இருக்கக் கண்டேன்.
எதைச் சொல்லி எடுத்துரைப்பேன் என்வாதம் எடுபடுமா என்றெண்ணி – சற்று
பதைத்து விட்டாலும் சிந்தனை தெளிவுகண்டு சிறுகவிதை தொடுத்தேன் இங்கு.

துணையின்றி செயல்பட்டு பிறமொழியை ஓரம்கட்டி - எழுத்தால்
தனித்தன்மை கொண்டது தமிழென அறிவாய் தோழா.
அகரவரிசை தாண்டி லகரழகர மெல்லாம் வேறெந்த மொழியிலுண்டு? - இன்னும்
சிகரமாய் தண்ணீர், வெந்நீர், பன்னீரென ஓரெழுத்து வித்தை தமிழில்தான் உண்டு.
டண்ணகரத்தில் தண்ணீர் தன்னகரத்தில் வெந்நீர் றன்னரத்தில் பன்னீர் கண்டோம். .

தேனீர் என்று சொன்னால் தேள்வந்து கொட்டிடுமா? – இதைமறந்து
நானிதோ துயிலெழுந்தேன் கொண்டுவா டீயை என்பதில் எதைக் கண்டீர்?
கடைக்குச் செல்கிறேன் என்று சொன்னால் கடைவாசல் திறக்காதா? - மெல்லச்சிறு 
நடையால் ‘ஷாப்பிங்செல்கிறேன் என்றுரைத்து ஏற்றமென்ன கண்டீர்?

வேட்டியை வேஷ்டி என்று சொல்வது ஏனோ? – அது என்விருப்பம் என்றால்     ஆட்டுக் குட்டியை ஆஷ்டு குட்டியெனச் சொல்வதும் தகுமா? எடுபடுமா?
‘டூட்T மறந்து ‘லூட்T' அடிக்கிறான் என்றெழுதி மகிழ்வது என்ன மொழியோ? - போதும் சேட்டைகள் கூட்டி வேட்டையாடி கொல்ல வேண்டாம் தமிழ் பிழைக்கட்டும்.

ஆழ்ந்து சிந்திப்பீர் அலைபாயும் ஐயம் தெளிவீர் – தமிழதன் எழுத்தால்
வீழ்ந்து விடவில்லை விழித்தொருநாள் விடியலைக் காண்போம் திண்ணம் -ஆனால்
தமிழுக்கிணை தமிழேயென தம்பட்டம் அடித்து திரைமறைவில்
அமிழ்து மொழியை அரைகுறை மொழியாக்கும் அலங்கோல விளையாட்டு   
இனியும் வேண்டாம் எனக்கூறி எளியோன் விடைபெறுவேன்.  
      * * *

காமாராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாமதுரை கவிஞர் பேரவை சார்பாக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் பரிசுபெற்ற கவிதை. 
"கவி பாரதி" என்னும் பட்டத்துடன் சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. நாள்: 27.07.2016.