Monday, December 28, 2015

விளக்கேற்றி வைப்போம் விழா - 2015



அருமை மாணவச் செவிலியருக்கு சில சொற்கள்:   
விளக்கேற்றி நும்வாழ்வைத் தொடங்கும் இந்நாளில் ஒருகணம்
விளக்கணைந்து வீதியில் நிற்கும் வீரபூமி சென்னை மக்களின்
விதியை எண்ணி விழித்திரையில் உணர்ந்து பார்ப்போம் - ஆங்கவர்
கதியை எண்ணி கண்ணீரைக் காணிக்கை ஆக்குவோம்.
அவர்தம் கனவுகளை நனவாக்க நாமென்ன செய்வோமென
சுவர்மீது சித்திரமாய் மனதில் பதித்து மாற்றுவழி காண்போம்.

சோதனையை சாதனையாக்கி, சென்னையைப் புரட்டியெடுத்து,
மாதம் நிறைவாய் ஆதவனை அறவே மறைத்து, ஆனந்த நடனமாடி,
ஏதும் அறியா பச்சிளங் குழந்தைகளுக்குப் புதிராகி,
வேதமெல்லாம் பொய்யாக்கி, வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சி,
போதும் போதுமென மழையைக் கொட்டிய வருண பகவானே,
முடிந்ததா உன் உக்கிர நடனம்; ஓடிப்போ - இனியெம்மை
நொடியளவும் திரும்பிப் பார்க்காதே போதும் உன் திருட்டு நாடகம்.

புலம்பியது போதும் பொறுமை கடலினும் பெரிது;
கலங்கியது போதும் கண்ணிர் வற்றிவிடும்;
அலங்கார வார்த்தைகளால் அழுதாலும் இழந்தவை திரும்பிவார;
தளர்ந்த நடை மாற்றி நிமிர்ந்த முகம் தூக்கி
வளரும் தமிழகத்திற்கு தோள்கொடுப்போம் வாரீர்.
தொண்டு செய்வோம் கேளீர் தொய்வு வேண்டாம். 

அருமைச் செவிலியரே உம்தொண்டு அளவிடற்கரியது
தருணம் பார்த்து தக்க சேவை செய்து சிறப்படைவீர்.
உடல்நலம் மனநலமாம்; மனநலம் உடல்நலமாம்;
திடமாக இதையுணர்த்தும் இருவகை சேவை உமதாகும். 
இதையின்று உறுதிப்படுத்த விளக்கேந்தி வலம் வந்தீர்
எதையும் சாதிப்பீர் எந்திரமாய் செயல்படுவீர்.

தூங்கும் விளக்கை இரு கைகளில் ஏந்தி
ஏங்கும் கண்களால் எதையோ எதிர்பார்த்து
மேடையேறி, மெதுவாக அடியெடுத்து, மெல்லிய கரம் நீட்டி
ஜாடையாக விழிகளால் பேசி விளக்கை ஏற்றக் கண்டீர்.
தூங்கிய விளக்கை துயிலெழுப்பிய கரங்கள் ராசியானவை
பூங்காற்று தான்வீசும் இனியுங்கள் வாழ்வு மலரும்.

விளக்கிற்கு ஒளியேற்ற வந்தது யாரென எண்ணிப் பார்த்தீரா?
விளக்கம் யான்தருமுன் ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள் – சொல்லட்டுமா?
அளப்பரிய கல்விச் செல்வத்திற்கோர் அன்னை சரசுவதி அன்றோ!
இதைவிட இனிதாய் வேறென்ன வேண்டும் சொல்மனமே - இதுவெறும்
கதையல்ல இனியுங்கள் வாழ்வில் வசந்தம் வீசும் – வானளவில்
எதையும் சாதிப்பீர் எமனையும் எதிர்கொள்வீர் இஃதுண்மை.

வருகை தந்த பெற்றோருக்கு சில சொற்கள்:
என்னென்ன ஏக்கங்கள், எத்தனை எதிர்பார்ப்புக்கள் உங்கள் மனதில்;
சொன்னால் நம்புவீரா இதுவெறும் வார்த்தை ஜாலமல்ல.
கல்லூரி நிறுவனர் ரவிசங்கர் ஒரு சாந்த மூர்த்தி;  
உழைப்பால் உயர்ந்தவர், உத்தமர், உண்மை விளம்பி – எதிலும்
பிழைகாணக் கூடாதென மழைபோல் பணத்தைக் கொட்டுபவர்.
மாணவியர் நலமே தன்நலம் என்பார் மறுக்க முடியாது. புரியாமல் சிலர் குறை கண்டாலும் இறுதியில் மனம் மாறுவர் உண்மை.

கல்லூரி முதல்வர் இக்கல்லூரிக்குப் புதியவர் – ஆனாலும்
வல்லமையும் வாய்மையும் பெற்றவர் வணங்குங்கள்.
தெளிந்த ஞானம், தடுமாறா செயல்பாடு, தன்வழி தனிவழியென
வெளிப்படையாக செயல்பட்டு வெற்றிக்கு வித்திடுவார்;
துணை முதல்வரோ குட்டிப் பூனையாய் அடங்கி இருப்பார் – ஆனாலும் தாய்ப்பூனை எட்டடி பாய்ந்தால் குட்டிப்பூனை பதினாறடி பாயுமன்றோ!  

பணியாற்றும் ஆசிரிய அலுவலர்கள் அனுபவத்தில் குறையில்லை
அவர்தம் அனுகுமுறையிலும் பிழையில்லை;
நல்ல ஞானம், கடின உழைப்பு இரண்டும் கூட்டி
தெள்ளந் தெளிவாக தேர்ச்சிக்கு வழி சொல்வோம் நம்புங்கள்.
சொல்லப் போனால் உங்கள் பிள்ளைகள் எங்கள் 
செல்லப் பிள்ளைகள்; சிற்பமாய் செதிக்கிடுவோம் உண்மை.
நன்றி! வணக்கம்! விடை பெறுவேன்.
Dr. R. Varadharajan
23.12.2015
[ Elysinn Lamp Fest 2015 (23.12.2015)]
Chief guests: Mrs. Saraswathy (Gr.I) & Mrs. Vasantha (GrII) Nursing Supdts. GH, Sivagangai.