Wednesday, September 18, 2013

தேடி வந்த இடம் நல்ல இடம்


மனதில் கனவுகள் ஆயிரம் தேக்கி – பிள்ளையைப் பெற்ற
கனம் இனி குறையுமென்ற நம்பிக்கை கூட்டி
சிவன் தாங்கும் கங்கையாம் சிவகங்கைச் சீமையில், ஒரு மூலையில்,
பூவந்திச் சாலையில், அமைதிச் சூழலில், RASS எனும்
செவிலியர் கல்விச் சோலையில் அடியெடுத்து வைத்துள்ள பெற்றோர்களே!

வானத்தில் காணும் வட்ட நிலவைத் தொடலாமா – அல்லது
ஞானத்தில் சிறந்த அறிவியல் சாதனைகள் படைக்கலாமா – அல்லது
தானத்திலும் சிறந்த மானிடர் சேவையில் செவிலியர் ஆகலாமா – என்றுபல
கோணத்தில் சீரிய சிந்தனைப் பயணத்தில் தத்தளித்து – இறுதியில்
செவிலியர் ஆவதே மேலென எண்ணித் துணிந்த செவிலியர் பூந்தளிர்களே!

உங்களையும் உடன் வந்துள்ள உரிமை கொண்டவர்களையும்
இங்குநான் வணங்கிடுவேன்; வருக வருகவென வரவேற்பேன்.
வாழ்த்திடுவேன். இதற்கொரு வாய்பபளித்த கல்லூரி முதல்வருக்கும்
கடமைக் கடலில் முத்தெடுக்கும் தன்னலமற்ற தாளாளர் நிறுவனருக்கும்
நன்றி சொல்லி உடன் பணியாற்றூம் ஆசிரியர் அலுவலரையும் வணங்கி
இச்சிறு கவிதை படைத்தேன் பணிவோடு.

மனதில் உதித்தவை கனவுகள் என்றாலும்
தினமும் அவைகளுக்கு உயிர் கொடுக்க ஏங்கி - சொந்த
வாயைக் கட்டி வயிற்றை இறுக்கி பிள்ளையின்
வளம் கூட்ட வாழ்வில் ஏற்றம் காண இங்கு இடம் பெற்றீர்.
உளமாறச் சொல்வேன் ஒளிமயமான நாட்கள் உங்கள் பிள்ளைக்குண்டு.

கனவு காணலாம் ஆனால் பகற்கனவு காண்பது தவறு - ஆனாலும்
உங்கள் கனவு பகற்கனவல்ல பலிக்கும் கனவுதான் - ஏனெனில்
உங்கள் நினைவில் நின்றவை நனவாக நல்ல இடம் தேர்வு செய்தீர்.
நடக்கப் போகும் நாட்கள் இனி நல்லவைதான் இதில் ஐயமில்லை.
தொடக்கம் நல்லது எனில் முடிவும் அப்படியே அமையும் - உண்மை.

எங்களை நம்பி உங்கள் பிள்ளையை இங்கு சேர்த்தபின்
உங்கள் கனவு நனவாகும் அந்தநாள் இனி நெருங்கும்;
தங்கக் கலசம் ஏந்தி தத்தித் தாவி மெல்ல
வங்கக் கடலில் முத்தெடுத்து பெருமை சேர்க்கும் நாளும் நெருங்கும்.
பொங்கும் சூழ்நிலை பலகண்டு வாழ்வில் ஏற்றமே காண்பீர்.

இங்கு பயிலப் போகும் உங்கள் பிள்ளைக்கு
தங்கிப் படிக்க நல்லதொரு விடுதி உண்டு;
தரமான உணவு, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உண்டு;
தாயாக இருந்து வழிநடத்தும் நல்ல காப்பாளர் உண்டு;
காற்றில் அசைந்தாடும் செடிநிழலில் இளைப்பாற இடமுண்டு.
இனி என்ன வேண்டும்?

மங்காப் புகழ் கொண்ட மாமன்னர் திருமலை நாயக்கன் அன்று
மங்கை மீனாட்சிக்குக் கட்டிய மதுரைக் கோபுரம் ஒருபுறமும்;
மருது பாண்டியர் ஆண்ட சிவகங்கைக் கோட்டை அரன்மனை மறுபுறமும்;
மனம் நெகிழ்ந்து துதிக்க ஏசுபிரான் தலங்கள் நாற்புறம் உண்டு,
தினம் ஐந்துமுறை தொழுகைக்கு அல்லாவின் பள்ளி வாசலும் அருகிலுண்டு.
இனி என்ன வேண்டும்?

சோதனைக் கூடங்கள் உண்டு வகுப்பில் சொன்னதன் உண்மை அறிய
சாதனை படைப்போருக்கு வாய்ப்பளிக்க போட்டிகள் உண்டு.
நல்லபல நூல்கள் ஆயிரம் உண்டு நூலகத்தில்.
சொல்லில் தேர்ந்த சிறந்த ஆசிரியர் பெருமக்கள் இங்குண்டு.
எல்லாவற்றிற்கும் மேலாக நூற்றுக்கு நூறு தேர்ச்சியும் ஊண்டு.
இனி என்ன வேண்டும்?

கல்லூரி முதல்வர் இளம் மாணவியருக்கு அரவணைப்பில் அன்னை,
சொல்லில் நல்லவர், செயலில் வல்லவர்,  
நல்லபல திட்டங்களை செயலாற்றத் துணிந்தவர்;
என்றெல்லாம் புகழலாம்; இவற்றிற் கெல்லாம் கலங்கரை விளக்காய்
என்றும் வெற்றிக்கு வழிகாட்டும் சேவையில் நமது நிறுவனர்-இது உண்மை.
இனி என்ன வேண்டும்?
  
இறுதியாக ஒன்று சொல்வேன் அதையும் அடித்துச் சொல்வேன்;
உறுதியாக நீங்கள் தேடி வந்த இடம் நல்ல இடமே.
அந்நியர் அல்ல நாங்கள் உமக்கு அனைத்திலும் நன்மையே கூடும்;
எண்ணியபடி எல்லாம் நடக்கும் எள்ளளவும் ஐயம் வேண்டாம்;
கண்ணியம் காத்து காலத்தை வெல்வோம் வாரீர்.
                        * * *
2013-’14-ம் ஆண்டு மாணவியர் மற்றும் பெற்றோர்களை வரவேற்கும் விழாவில் வாசிக்கப் பட்டத (செப்டம்பர் 2013)..