Saturday, November 26, 2011

போய் வருவோம் விடைதாரீர்

அனுபவத்தில் முதிற்சிபெற்ற ஆசிரியப் பெருந்தகையீர்!
அணுவணுவாய் மாணவர்தம் மனக்கருத்தை உணர்ந்தறிந்து
தினம்தினம்நற் பயிற்சிபெற திரண்டுவந்த நால்வருமே
மனந்திறந்து உமக்களிக்கும் மாசறுநல் மடலிதுவே!

நேற்றுவரை உடனிருந்து உளங்குளிர பகன்ற சொற்கள்
ஊற்றெனத்தான் பாய்ந்தனவே எம்மனதில் இடையின்றி.
தூற்றாது அதனைப்பெருந் துச்சமெனக் கருதாது
ஏற்றோம்யாம் இனிதுடனே எண்கரங்கள் முன்னேந்தி.

வான்றுளிக்கும் மாரிதனைச் செழிப்புடைய கானெனினும்
தானேற்கத் துளியேனும் தயங்காது அதுவன்ன,
தேன்கலந்த அமிழ்தமெனத் தெவிட்டாத தமிழினிலே
யாமளிக்கும் நன்றிசால் வணக்கம்பல ஏற்பீரே.

பிரிந்திடவோ மனமில்லை; பிரியோம்நாம் என்றாலும்
இருந்திடவும் இடமில்லை எவரிடம்போய் என்சொல்வோம்?
விருந்தொன்று நமைப்பிரித்து வேறெங்கும் விரட்டிடினும்
இருந்திடுவோம் ஒருங்கிணைந்து உளமதிலே ஒளிவீசி.

அன்றுமுதல் இன்றுவரை அறிந்துமறி யாமலுமே
ஒன்றிரண்டு சொற்குற்றம் சொல்லடுத்த செயற்குற்றம்
என்றேதும் கண்டிருப்பின் எண்ணமதில் கொள்ளாமல்
இன்றேநீர் பொருத்தருள்வீர் போய்வருவோம் விடதாரீர்.

=> 23.11.'67 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் நிறைவு நாள் விழாவில் வாசிக்கப்பட்ட து.

வந்துட்டாரையா வந்துட்டார் கவிதைபாட வந்துட்டார் !

அருமை மாணவச் செல்வங்களே! செவிலியச் செம்மல்களே!!
அழைப்புக்கு நன்றி, அருமை விருந்துக்கும் நன்றி – உங்கள்
உழைப்புக்கும் நன்றி உழைத்து ஓய்ந்த உள்ளங்களுக்கும் நன்றி.
“வந்துட்டாரையா வந்துட்டார் கவிதை மொழிபேச வந்துட்டார்
கயிற்றை மணலாகத் திரித்து கவிபாட வந்துட்டார் -இன்று
என்ன சொல்லப் போகிறாறோ ஏது சொல்லப் போகிறாறோவென
மெல்லக் கிசுகிசுக்கும் சொற்கள் என்காதில் விழுகின்றன - நானும்

நயமாக நாலைந்து வரிகள் சொல்வேன் கேளுங்கள் - வரிகள்
ரசிக்கும்படி இருந்தால் மெல்ல கையைத் தட்டுங்கள் – கைவலித்தால்
அருகில் அமர்ந்திருப்போரின் முதுகைத் தட்டுங்ககள் – ஆனாலும்
என்னருகில் யாருமில்லை என்பதால் என் முதுகுக்கு தப்பியது எனவே
எள்ளளவும் பயமின்றி சிலசொற்கள் சொல்வேன் கேளுங்கள்.

நானென்னைக் கவிஞனென்று சொல்லமாட்டேன் – ஏனென்றால்
கவிஞனுக்கு வேறு பெயர் புளுகு மூட்டை அவிழ்த்து விடுபவன்.
நானோ உண்மையைச் சொல்வேன் உள்ளதைத்தான் சொல்வேன் –ஏனெனில்
பொய் சொன்னால் புளுகன் புறம் பேசினால் கயவன் – எனவே
பொய் நீக்கி புதுமை நயம் சேர்த்து பகிர்வேன் சில சொற்கள்.

வின்னில் பறந்து வட்டநிலா தொட்டு வெற்றியுடன் கால்பதித்து
இது வட்டமல்ல பெரும் விட்டம் கொண்ட கோளமென
உலகுக்கு எடுத்துக் கூறிய பெருமை சொல்ல வரவில்லை இங்கு.
உலகமே என் கையிலென ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பற்றி
கவிபாட வரவில்லை அறட்டை அரங்கமும் இங்கில்லை.

தேனாய் இனிக்கும் இன்னிசை கலந்து எழில் நடனமாடி
அடிவயிறு குளுங்கச் சிரிக்க விகடம் சேர்த்து
இயல்பான பாவனை காட்டி எல்லோரையும் மகிழ்வித்து
சிரிக்க வைத்து சிந்திக்க வைத்து சிறப்பான நிகழ்ச்சி தந்த
அனைவருக்கும் என் பாராட்டுக்கள்.

இங்கு இருவருக்கு நன்றி சொல்வேன் இன்சொற்கள் சிலகேளீர்– ஒன்று
கிளிப்பிள்ளையாய் சொல்கேட்டு கின்னஸ் சாதனையென
கூண்டோடு தேர்ச்சி பெற்று தேன் சிட்டாய் பறந்து போனாலும்
தென்பாண்டி சீமையிலே சிவகங்கை மண்ணிலே சிறப்பான
இக்கல்லூரிக்கு பெருமை சேர்த்த மூத்த செவிலியருக்கு முதல் நன்றி!

எங்கள் இறுதி தேர்வு மார்ச் திங்களா – அல்லது
இந்தியச் சுதந்திரம் கண்ட ஆகஸ்டு திங்களா - என்றெல்லாம்
இரண்டும் கெட்டான் நிலைகண்டு, குழம்பித் தவித்து
மிரண்டு போய் மெல்ல மீண்டு இன்று தேர்வு கண்ட
இரண்டாம் குழு மாணவச் செவிலியரே!

நாங்களொன்றும் சளைத்தவர் அல்ல - ஜெயித்து காட்டுவோமென
சவால் விடுக்கும் சொற்கள் ஒலிக்கின்றன.
ஜெயித்துக் காட்டுவீர்களா? நூறு சதம் வெற்றி பெறுவீர்களா?
அது! இதைத்தான் எதிர் பார்க்கிறோம்.

ஏமாற்ற மாட்டீர்களே உங்கள் பதில் என்ன?
ஏமாறாதே ஏமாற்றாதே என்னும் புரட்சிப் பாடல்
உண்மயாக வேண்டும் கவிஞன் சொல் தின்மைபெற வேண்டும் - வாழ்வில்
ஏமாற்றம் வேண்டாம் பிறரை ஏமாற்றவும் வேண்டாம்.
அனைவரும் வெற்றி பெற வேண்டும் - அயலவர்
கண்ணேறு பட்டுவிட வேண்டாம்.

கண்ணேறு பட்டால் அது காயம் பட்ட உடலாகும் – நல்ல
சொல்லேறு பட்டால் அது புண்ணியம் செய்த உடலாகும்.
நல்லவை பேசுங்கள் நல்லவை கேளுங்கள் – பேசும் சொல்லில்
நயத்தோடு நாணயம் சேர்த்து பயம் நீக்கி வாழுங்கள்.

பயின்ற கல்லூரியின் புகழ் பாடுங்கள் – அருமை
நிறுவனர், முதல்வர், பயிற்றுனர் பெருமை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்! வையகம் போற்றும் உம்மை!
நன்றி! வணக்கம்!! விடை பெறுவேன்!!!

இன்றுமக்கு தீபஒளி ஏற்றும் நாள்

அழைப்புக்கு நன்றி! அருமை மாணவியரே,
உம்மையொரு கவிதை நடையில் வாழ்த்த வந்தேன் – இது
புதுக் கவிதை அன்றி புதுமைக் கவிதை அல்ல – இதில்
இலக்கணம் இல்லை எதுகை மோனை இல்லை.
வழக்கமான நடையில் சிறிது நயம் கூட்டி – கேட்போரை
மயக்கும் மாயச் சொற்கள் நிறைந்த எமாற்று வித்தை.

முதலாண்டு மாணவியரே, முதலில் உம்மை வரவேற்றேன்!
அருமை இளந் தென்றல்களே, இன்னிசைக் குயில்களே,
இன்றுமக்கு தீபஒளி ஏற்றும்நாள் – இந்தக்
கல்லூரிக்கு வரலாறு படைக்கும் நாள் -இதில்
புதிரேதும் போடவில்லை புரியும்படி நான் சொல்வேன்.

நடந்துவந்த பாதையோ கரடு முரடானது – ஆனாலும்
தொடர்ந்து வந்த சோதனைகள் சொற்பமே.
இடறி விழுந்தாலும் அதுவும் ஒரு நன்மைகுத்தான் – இவை
அனுபவம் கண்டோரின் அரிய சொற்கள்.

போட்டிகள் மிகுந்த சூழழில் நாம் ஏற்றமே என்றும் கண்டோம்
தோற்று விடுவோமா என்ற எண்ணம் என்றும் வந்ததில்லை.
ரவி என்றால் நிலா சங்கர் என்றால் சிவன் – இந்த
இரண்டும் இணைந்து செய்யும் சாதனைகள் ஏராளம். ஈ

சங்ககால வரலாற்றில் அன்று நாயன்மார்கள் அறுபத்தி மூவர் – ரவி
சங்கர்கால வரலாற்றில் இக்கல்லூரி தொடங்க இருபத்தி மூவர்.
இறுதித் தேர்வுவரை எங்களுக்குச் சோதனை – எனினும்
எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றது எங்கள் சாதனை.

பொறுமை காத்தோம் பொறாமை நீத்தோம் - எங்கள்
அருமை பெருமை ஊரறியும் அடக்கமாய் சொல்வேன்.
வாய்மை வென்றது இதில் வியப்பேதும் இல்லை- நல்ல
வரலாறு படைத்து விட்டோம் வரும் நாளில் வளம் காண்போம்.

முதல் தொடக்கம் நல்ல தொடக்கம் இன்று நல்ல முடிவு - இதில்
வித்தைகள் பல புரிந்தோம் வீணாகவில்லை எங்கள் முயற்சி.
”அத்தைமடி மெத்தையடி” இது கவிஞன் கண்ட கனவு – ஆனால்
“வெற்றிவழி எங்கள்வழி” இது எங்கள் கனவு.

சொன்னதைச் செய்வோம் செய்ததைத்தான் சொல்வோம் - வெறும்
திண்ணைப் பேச்சல்ல திடமான சொற்கள் இவை.
ஒரு சுற்று முடிந்து நான்காண்டு கடந்து விட்டோம்
மறு சுற்று தொடங்க ஒளியேற்றும் நாளிதுவே.

இருபத்தி மூன்றில் தொடங்கிய சேர்க்கை இடையில் நடனமாடி – இன்று
நாற்பதை நெருங்கி விட்டோம் நல்லதோர் வளர்ச்சி கண்டோம்.
பெருமை எமக்கென்றால் பேரானந்தம் உமக்கன்றோ!
அருமையான ஆசிரியப் பெருமக்கள் அரிய தலைமை இங்குண்டு.

இளைய மாணவிச் செவிலியரே – உங்கள் உடன்பிறவா
மூத்த சோதரிகள் உம்மை வருகவென்றும் வளம் பெறுகவென்றும்
இனிப்பு வழங்கி இன்முகம் தாங்கி முன் திங்களில்
களிப்புடன் இருகரம் கூட்டி வரவேற்கக் கண்டீர் –இன்று
உங்கள் வாழ்வில் ஒளிவீச, வளம் பெருக நீரிங்கு
மங்காத விளக்கேற்றி வீரநடை கண்டீர்.

FLORANCE NIGHTINGALE காட்டிய வழியில் இன்று
GLOWING LIGHT IN GALE ஒளிரட்டும் மிளிரட்டும்!
நல்லவை நாலும் நடக்கும் நும் வாழ்வில்
இனிவரும் நாள் உங்களுக்கே ஆனாலும் – வாழ்வில்
எளிமை வேண்டும், இனிய சொல் வேண்டும்,
உரிமையோடு சொன்னேன் உண்மையைச் சொன்னேன்.

எற்றம் காண்பீர்! எதிலும் வெல்வீர்!
என் வாழ்த்துக்கள் – இல்லை
எங்கள் இணைந்த வாழ்த்துக்கள். நன்றி! வணக்கம்!
(RASS ACADEMY NURSING கல்லூரியில் 26/03/2011 அன்று நடந்த LAMP LIGHTING விழாவில் வசித்தது)

RASS செவிலியர் கல்லூரி ராசியான கல்லூரி

புகழ்வது எளிது; பெற்ற புகழினை மறைப்பது கடினம்;
இகழ்வதும் எளிது; இல்லாததை உண்டென்பதும் கடினம்.
இஃதென்ன புதிரென்று புலம்பும் குரலெங்கோ தவழ்ந்துவர
குரல்வரும் திசை நோக்கி நானிக் குனிகின்றேன்.

குற்றமேதும் கண்டனரோ, தலையில் குட்டிடவும் எண்ணினரோ!
சற்றே தயங்கி நின்றேன் சரிந்த மனதைப் புரிந்து கொண்டேன்.
அருமை மாணவியரே, வருங்காலச் செவிலியரே,
பெருமை பலவுண்டு நீவீர் பயிலும் இக்கல்வி நிறுவனத்தில்.
வெறும்புகழ் பாடவில்லை வெண்பாவும் தீட்டவில்லை.

அரும்பாடு பட்டதால் நம் நிறுவனத்தின் மேலாளர்,
நித்தமொரு திட்டம் தீட்டி நிறைவு கூட்டும் தாளாளர்,
பரிவு, பாசம், பண்பில் குறைவில்லா முதல்வர், துணைமுதல்வர்,
பாடம் பயிற்றிட தகுதியுள்ள விரிவுரையாளர் பலரோடு
குறையேதும் இல்லாது குன்றத்தின் ஒளிவிளக்காய்உம்மை
வழிநடத்திப் பெருமை காணும் பணியாளர் இங்குண்டு.

இயற்கைச் சூழல்; எழில்கொஞ்சும் மரநிழல்கள்,
அருகிலே உணவு விடுதி, அன்பான காப்பாளர்,
படித்ததைச் செயல்வழிகாண தனித்தனி ஆய்வகங்கள்,
பிடித்ததைப் புரட்டிப்பார்க்க பலநூல்கொண்ட நூலகம்,
திறமைகள் பலகாட்ட பல்வகைப் போட்டிகள்,
போட்டிக்கு பலபரிசுகள்; தாய்தந்தை நேர்காணல்,
இன்னும் ஏராளம் இங்குண்டு எண்ணிப் பாருங்கள்.

தூரத்துப் பச்சை கண்ணுக்கினிமை மறந்துவிடுங்கள்.
சேரநினைத்துச் சேர்ந்த இடம் சிறந்த இடமே.
பெருமை கொள்வீர் வெறும் புகழ்ச்சி இல்லை.
Rass செவிலியர் கல்லூரி என்றும் ராசியான கல்லூரியே.

(RASS ACADEMY NURSING கல்லூரியின் ஜனவரி-2011 QUARTERLY MAGAZINE – ல் வெளியிடப்பட்டது)

பிரிந்து செல்வது பேரிழப்பு, பெரும் துயர்

நன்றி மறப்பது நன்றன்று என்று
அன்றே சொல்லி வைத்தார் ஒருவர்.
சொன்னவர் என்றோ சென்று விட்டார்
பின்னவர் அதன்வழி செயல்படும் அழகிதுவே.

இதுவென்ன புதிரென எண்ண வேண்டாம்
இயல்பாய் எடுத்துரைப்பேன் கேளீர – ஆம்
நான்காம் ஆண்டு மாணவச் செவிலியர்
பாங்குடன் நேற்று பிரியா விடை பெற்றீர்.

பிரிந்து செல்வது பேரிழப்பு, பெரும் துயர் என்றுணர்ந்து
நெறிதவழாது நன்றி சொல்ல நிறைமனதாய் கூடினரின்று.
சென்று வாருங்கள் செயல்பலவென்று வாருங்கள் என
தென்றலின் இயலிசை நாடகமாய் வடிவமைத்து – இளையோர்
பொங்கும் புதனன்று பொழிந்து விட்ட அழகே அழகு.

இளைய சோதரிகள் எண்ணங்கள் பல சேர்த்து
கலையம்சம் கூட்டி கற்பனைத் தேரோட்டி
அலையலையாய் நிகழ்ச்சிகள் பல சேர்த்து
மழையாய்க் கொட்டிய மழழைப் படைப்புகள் அற்புதம்.
இது தொடர வேண்டும் இனியும் வளர வேண்டும்.

கிடைத்ததை சுருட்டிக் கொண்டு செல்லாமல்
படைப்பில் நாங்களும் சளைத்தவர் அல்லவென – விருந்து
படைத்து உண்டு மகிழச் செய்தீர் – கலைப்
படைப்புகள் பல சேர்த்து பரவசம் மேலிட
மனம் குளிரச் செய்தீர் மட்டிலா மகிழ்ச்சிதான்.
உங்களைப் பற்றி ஓரிரு வரிகள் சொல்ல விருப்பம் எனக்கு – ஆனால்
சங்கடப் படும் வகையில் எதுவும் சொல்ல மாட்டேன் பயம் வேண்டாம்.

தொடக்கத்தில் 23 பேர் – ஆனால்
அதில் இருவர் இன்றில்லை அனைவரும் அறிவீர்.
செல்வி பிரத்திமா நீரென்ன குறை கண்டீரோ
பிரிந்து செல்வேனென வேறு கல்லூரி நாடிச் சென்றீர்.
பிரிந்து சென்ற இழப்பு எமக்கல்ல உமக்குதான் உறுதியாய் சொல்வேன்.
ஓவியச் செல்வியே, நீ ஓவியமாய் இருந்தது சரிதான் – ஆனாலும்
இடையில் காவியமாய் மாறிவிட்ட காரணம்தான் என்னவோ!

ஆவியாக எங்கோ பறந்து திரிந்தாலும்
மேவியதோர் எண்ணங்களில் இன்றுனையும் அழைக்கின்றேன்.
உன் தோழியரை வாழ்த்திட ஒருகணம் வருவாயா?
வாழ்த்திட வயதில்லை உனக்கு என்றாலும்
வாழ்ந்து முடித்த அமரர் நிலையில் உனைக் கண்டேன்.

உன் உடன் தோழிகள் அளிக்கும் விருந்தில்
நீயும் கலந்து கற்பனையாய் வாழ்த்தி
தொடர்வாய் உன் நீண்ட மாயப் பயணத்தை.

ஆஹா! மாணவச் செல்வங்களை சற்று மறந்து
எங்கோ செல்கின்றேன் பொறுங்கள்
இதோ உங்களுக்கு சிலவரிகள் தருகின்றேன்.
இருபத்தொன்று என்பது எண்ணியல் சோதிடத்தில் உயர்ந்த எண்.
அதன் பலன் அனைவருக்கும் கிட்டட்டும்.

கடந்த நாட்களை திரும்பிப் பார்க்கிறேன்.
உங்கள் குழுவில் எல்லா அம்சங்களும் ஏராளம் – வகுப்பில்
குறும்பு செய்ய இருவர் குட்டி தூக்கம் போட இருவர்,
கருத்தோடு பாடம் கேட்க இருவர் நறுக்கென சிரிப்பூட்ட இருவர்,
எதையோ எண்ணி ஏங்கித் தவிக்க இருவர்
இதையும் படிக்க வெண்டுமாவென மனதளவில் திட்ட இருவர்,
அவள் வருவாளா என்ற பாடலுக்கு இணையாக
இவர் எப்போது வகுப்பை விட்டு போவாரோ என்று
எதிர் பாட்டு பாட இருவர்.

கருமமே கண்ணென கருத்தில் ஆழ்ந்திட இருவர்
பரிதாபமாய் காணும் இருவர் பக்கத்தில் இருப்பவரை சீண்டி விடும் இருவர் – ஆனால் பாடத்தில் கவனம் செலுத்த மட்டும் ஒருவர் – இப்படி
பலர் இருக்கக் கண்டேன் – ஆனாலும்
நல்ல உள்ளங்கள்! நமக்கெதற்கு வம்பென
தன் செயலோடு தாணுண்டு என்றவழி செல்பவர் நீவீர்.
வாழ்க வளமுடன்!
எண்ணம்போல் எல்லாம் கிட்டும் உமக்கு.
நன்றி! வணக்கம்!

=> (RASS ACADEMY NURSING கல்லூரியில் 24/02/2011-ல் 4.ம் ஆண்டு மாணவிகள் நன்றி கூறும் விழாவில் வாசித்தது)

ஏன் இன்று பள்ளிக்கு செல்லவில்லை?

செல்லக் குழந்தைகளே, செல்வக் குழந்தைகளே
பள்ளிப் படிப்பை பாதியில் விட்டதேனோ?
துள்ளித் திரிந்து தாவியோடி தவித்து விட்டதா? - இல்லை
துரத்தி விரட்டியோடி வேகம் ஓய்ந்து விட்டதா?
பள்ளி செல்ல மறந்ததா இன்று - இல்லை
பாடம் கற்க கசந்ததா? பள்ளிக்கு ஏன் போகவில்லை?
சொல்வீர் நீங்கள் செவி மடுப்போம் நாங்கள்.

அருமை குழந்தைகளே,
பொல்லாத காலமிது பொறுமை வேண்டும்
போக்கிரித் தனங்கள் நீங்கி வளர வேண்டும்.
யார்பெற்ற குழந்தையென ஊர்சொல்ல வேண்டும்.
நேர்மை வழியே நல்வழியென நீர்சொல்ல வேண்டும்.
பள்ளி படிப்பை பாதியில் நிறுத்த வேண்டாம் - பணம்
அள்ளிக் கொடுத்தாலும் எதிலும் பேராசை வேண்டாம்.
உண்மை பேசுங்கள் உத்தமராய் வாழுங்கள்.
பொய்மை வேண்டாம் பொறாமையும் வேண்டாம் - என்றும்
வாய்மையே வெல்லும் இது வல்லவன் வாக்கு.
கற்கப் போவது கைப்பிடி மண்ணளவு.
காலம் கடந்து விட்டால் அதுவும் கிட்டாது.
நன்கு படிக்க வேண்டும் நும்மாசானை மதிக்க வேண்டும்.
உன்குறை எதுவானாலும் உள்ளத்தே நோக வேண்டாம்.
உழைத்து பாருங்கள் உரியவை தானாய் கிட்டும்.
"நான்" முக்கியமா நாடு முக்கியமா உன் எண்ணமென்ன?
"நான்" தான் முக்கியமெனில் நாடுமிகத் தலை குனியும்.
அது சுயநலம் - வேண்டவே வேண்டாம்.
நாடு முக்கியமென தலை நிமிர்ந்து சொல்லுங்கள் - நாட்டின்
வளம் காப்போம் மிகுந்த வலிமை சேர்ப்போம்.
நாடு முன்னேறும் நாமும் முன்னேறுவோம்.
போதுமிந்த அறிவுரை பொறுமையோடு கேட்டதற்கு
நன்றி சொல்வேன் நன்கு சொல்வேன்.
நாவார வாழ்த்திடுவேன். வாழ்க நீவீர்.
வளர்க! வெல்க! நன்றி! வணக்கம்!

=> 2003: எல்லோருக்கும் கல்வி என்ற நிலையில் பள்ளி செல்லாத குழந்தைகளுக்காக எழுதப்பட்டது இக்கவிதை.

புரட்சிப் பெண்ணே பயம் வேண்டாம்

புரட்சிப் பெண்ணே, புதுமைப் பெண்ணே,
ஒன்று இரண்டல்ல
மூன்று நான்குபேர் ஏசினாலும்
அஞ்சும் நிலைவேண்டம் ஆறுதலடைக - அங்குள்ள
ஏழும் எட்டுமாவென எண்ண வேண்டாம்.
நவநாகரீக உலகில் உன்திறமை பத்தும் செய்யும்.
பயம்நீக்கி செயல்படுக புரட்சிப் பெண்ணே.

=> 2005: பொதுவாக இன்றைய நாளில் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லை.
ஆனாலும் பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் - அச்சம் வேண்டியதில்லை என்ற கருத்தில் எழுந்தது இக்கவிதை.

பெண்களே ஏனிந்த பொறாமை

பெண்களே, கேளுங்கள் சற்றே - உங்கள்
கண்ணுக்கு அழகூட்ட கயல்விழி புருவத்திற்கு மையிடலாம்...
கன்னத்தில் பளிச்சிடும் ரோசாநிறப் பவுடரிடலாம்....
கருத்தமென் உதட்டிற்குப் பலவண்ணச் சாயமிடலாம்....
உச்சி வகிடெடுத்து உதிரம்போல் செந்தூரம் கொட்டிடலாம்....
நெற்றியின் நடுவிலே நாலுவகைப் பொட்டிடலாம்....
பின்னல் சடையோடு பொருந்தும் அயல்முடி சவுரி கட்டலாம்....
கோதிவிட்ட கூந்தல் அடக்க வலைபின்னல் கட்டலாம்....
அதிலும் ஒருகூடை மலர்தொடுத்த சரத்தைச் சுற்றலாம்....
காது மூக்கு இருபுறமும் மின்னும்கல் அணிகள் பூட்டலாம்....
கழுத்துநோக பவளமுத்து மாலைகள் தொங்கிடலாம்....
மார்பு நிமிர்த்தி மயக்கிடவோர் கச்சை கட்டலாம்....
அங்கமெலாம் தங்கமென வியக்க ஆபரணங்கள் தொங்கலாம்....
கைகளில் கலகலக்க கண்ணாடி வளையல்கள் மாட்டலாம்....
கைவிரல் கால்விரலில் கணையாழி மெட்டி கோக்கலாம்....
இறுதியாக வாரிய கூந்தலையும் அவிழ்த்து விடலாம்....
ஆனால் ஆண்கள் செய்த பாவமென்ன?
வெளுத்த தலைக்கும் வெண்தாடி மீசைக்கும்
கருப்புச் சாயமிட்டால் கரிச்சிக் கொட்டுவதேன்?
நீங்களும் அதைச்செய்ய மறக்கவில்லையே நியாயமா இது ?

=> 2004 :இன்றைய நாளில் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் நரைத்த தலை முடிக்கு மை போடுவது சாதாரணம் ஆகிவிட்டது. ஆனலும் மை போட்ட தலையுடன் உள்ள ஆண்களைப் பார்த்தால் 'இது தேவையா' என்பது போல் அவர்களது பார்வை காணமுடிகிறது. இதன் எதிரொளியே இந்தக் கவிதைக்கு பின்னணி.

Friday, November 25, 2011

ஆசிரியர் தினவிழா நன்றியுரை

அனைவருக்கும் வணக்கம்.
அமைதி காத்த சபையோருக்கும் வணக்கம்.

நன்றியுரை என்றாலே நகருங்கள் போவோமென
சென்றுகொண்டே இருப்பர் சிலர்.
நின்று கொஞ்சம் வேடிக்கை பார்ப்பர் இன்னும் சிலர்,
அமர்ந்திருந்து அடக்கமாய் இருப்பர் அடுத்த சிலர்.
எனவே நன்றியுரை சுருங்கச் சொல்வேன்
சற்றேநீர் செவி மடுப்பீர்.

விழாவின் விடிவெள்ளி நாயகராய் வந்து சிறப்பிக்கவிருந்த
பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய மாவட்ட ஆட்சித் தலைவர்
வரவியலாத குறை நீக்கி நிறைவு தந்த
நேர்முக உதவியாளர் அவர்களுக்கு நன்றி.

தனைத் தலைவனாய் தலைமை தாங்கி சிறப்பித்த
முதன்மைக் கல்வி அலுவலருக்கு நன்றி.

வருகை தந்த அனைவரையும் மனமாற
இருகை கூப்பி வரவேற்பளித்த
பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலருக்கு நன்றி.

மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவருக்கு நன்றி,
விழா சிறக்க பொருளுதவி அளித்த அனைவருக்கும் நன்றி.

மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்க நிலையென
எல்லாநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நன்றி,
உடன் வந்து அமர்ந்துள்ள உதவி ஆசிரியர்களுக்கு நன்றி.

பல்வேறு பள்ளித் தாளாளர்களுக்கு நன்றி,
மாணவச் செல்வங்கள் மற்றும் பெற்றோர்,
மேடை அமைப்பு, ஒலியொளி அமைப்பு,
பல்வேறு பத்திரிக்கை நிரூபர், தொலைக்காட்சி நிரூபர்
அனைவருக்கும் நன்றி.

பணீயில் இருப்போர், பணியை முடித்தோர்,
வாழ்த்துரை அளித்தோர், வாழ்த்துக்கு உரியோர்,
அனைவருக்கும் நன்றி.

இடையில் மெல்ல நழுவிச் சென்ற நல்லவர்களுக்கும் நன்றி
இறுதிவரை இருகை கட்டி இருக்கையோடு இருந்தோருக்கும் நன்றி,
எள்ளி நகையாடி ஏளனம் செய்தோருக்கும் நன்றி,
எழுந்து ஓட தயாராகிவிட்ட அனைவருக்கும் நன்றி.

விட்டுப் போன அனைவருக்கும் நன்றி. வணக்கம்.

=>18.02.'02 அன்று தஞ்சை மாவட்ட ஆசிரியர் தினவிழாவின் இறுதியில் வாசித்த நன்றியுரை.

தஞ்சை ஊரகம் ஆசிரியர் ஓய்வு - வாழ்த்துரை

ஆசிரியர் பணி அறப்பணி என்பார்;
அறம் செழிக்க அனைத்தும் செழிக்கும்
வரம் பெற்று வளம் காணலாம் - நெஞ்சில்
உரம் பெற்று உறுதியும் காணலாம்.

நீண்டதொரு பயணம்செய்து நெடுநாள் கடந்தின்று
வேண்டாத எண்ணங்களை எட்டிப் புறம்வைத்து
தூண்டா மணிவிளக்காய் தூயபணி முடித்து விட்டால்
அஃதென்ன பணிஓய்வா அல்லது பணிநிறைவா?

பணி ஓய்வென்பது பதமான சொல்லாகும்
பணி நிறைவென்பது இதமான சொல்லாகும்.
மானிட வாழ்விற்கு நீண்ட ஓய்வேது?

தினம் உண்பதில் ஓய்வில்லை
உடை உடுப்பதில் ஓய்வில்லை
மனம் சிந்திக்க ஓய்வில்லை
தினம் ஐம்புலன்களுக்கும் ஓய்வில்லை
பின்னர் எதற்குத்தான் ஓய்வென்போம்?

கட்டுண்ட நிலைக்கு மட்டுமே ஓய்வெனலாம்
சற்றே விளக்கினால் சாலப் பொருந்தும்.
அரசுப் பணியில் ஆயிரம் விதிகள்
அதிலும் பலப்பல துணை விதிகள்
அன்றாடப் பணிகளில் தடையாய் நிற்கும்.

இன்றோ நீவீர் விடுதலை பெற்றீர் - இனி
விதிகள் உம்மை கட்டுப் படுத்தா;
விரும்பினால் விண்ணிலும் பாயலாம்
துரும்பாய் நினைத்தால் தூக்கி எறியலாம்
ஒருகணம் நினைத்தால் பணிஓய்வில்லை பணிநிறைவே எனலாம்.

பணிநிறைவு செய்தோர் பட்டியலில் இடம் கண்டீர்.
முப்பதுக்கும் மேலான ஆண்டுகள் பணிசெய்தீர்
தொட்டவை துலங்க தொண்டு செய்தீர்
தொண்டுள்ளம் ஓங்க வளம் கண்டீர்.

ஆயிரமாயிரம் மாணவ மணிகளுக்கு
ஏணியாய் நின்று ஏற்றம் தந்தீர்
அறியாமை நீக்கும் அருந்தொண்டு புரிந்தீர்
அண்ணைக்கும் மேலான அரவணைப்பு தந்தீர்
என்றைக்கும் நும்புகழ் நிலைத்தோங்கும்
நன்மணிகளை உருவாக்கி ஏற்றம் பலகண்டீர்.

நல்லாசிரியர் விருது பெற்றார் ஒருவர்
நல்லாசான் நலம்பெற வளம்பெற
இறைவன் ஆசியோடு என்வாழ்த்தும் கூறுவேன்.

பணிநிறைவு கண்டார் பதினைந்து பேரும்
பரிமான உலகில் மூத்தோராய் வாழியவே.
எம்மதமும் சம்மதமே எனக்கூறும் வகையிலே
மும்மதமும் சேர்ந்தின்று மூத்தநல் ஆசான்களை
சபையினில் வாழ்த்துவது சாலச் சிறந்ததே.

பொன்னணி பொன்னாடையுடன் புகழாரம் பெற்றிர்
மனமாற வாழ்த்து சொல்வேன்.
உமதரிய தொண்டுக்கோர் நன்றியென்பேன்.

நலம் கண்டு வளம் பெறுக.
வாழ்க வளமுடன். வாழிய வாழியவே.
வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.

=> 23.02.'02 அன்று தஞ்சை (ஊரகம்) நிறைவு பெறும் ஆசிரியர்களை விழாவில் வாழ்த்தியது.

ஜெ.ஆர்.சி பணியிடைப் பயிற்சி -வரவேற்புரை

சங்கமதில் தமிழ் காத்த நகரம் மதுரையெனில்
சங்கமத்தில் காவிரி கண்டது தஞ்சையன்றோ!
இம்மண்ணின் பெருமை ஏராளம்
ஏற்புடைய சாதனைகள் தாராளம்!

இந்நாள் ஒரு பொன்நாள்.
என்னால் உன்னால் என்றில்லாமல்
நம்மால் எனக்கூடி ஏற்றம் காணும் இவ்விழா.

தூய ஜான் ஆம்புலன்ஸ் சங்கம் - மனித
நேயம் காக்கும் செஞ்சிலுவைச் சங்கம் - இவை
இரண்டும் கைகோர்த்து ஏற்பளித்த விழாவிற்கு
தலையாய கடமைகளைத் தள்ளிவைத்து
நிலமை அறிந்து தலைமைப் பொறுப்பேற்ற
மாவட்ட வருவாய் அலுவலரே!
வாழிய நின்கொற்றம் வளர்கநும் தொண்டு
வணங்கி வரவேற்றேன் வருகவே!

நேயத்தில் சிறந்தது மனித நேயம் - அதைப்
போற்றிக் காப்பது செஞ்சிலுவைச் சங்கம்.
சங்கத்தில் அங்கமாகி சஞ்சலப் படுவோர்க்கு
தங்கமனதோடு தந்திடும் உதவியே மனிதநேயம் -அதுவே
முதலுதவி - இல்லை - முதன்மையான உதவி.

இதற்கொரு பயிற்சி வேண்டாமா? - ஆம்
பயிற்சித் திட்டத்தைத் துவக்கி வைத்து
சிறப்புரை ஆற்றவந்த மேதகு நீதியரசர்
முனைவர் எஸ். மோகன் அவர்களே வருக!
தங்கள் வருகையால் தஞ்சை மண்ணே பெருமைபெரும்
தங்களைப் பெருமையோடு தலைவணங்கி வரவேற்றோம்.

இவையெல்லாம் சீரோடும் சிறப்போடும்
அவைபோற்றும் வண்ணம் அரியதொரு கடமையாற்றும்
ஆம்புலன்ஸ் சங்கத்தின் அரிய பொக்கிக்ஷமாம்
ராஜமகேந்திரரை மன்னரென்பதா? தொண்டரென்பதா?
தொண்டே சிறந்ததென்பார் தோழர் - எனவே
தொண்டுள்ளம் தாங்கிய தொண்டரே வருகவென்பேன்.

சாட்டையில்லா பம்பரமாய் சளைக்காது கடமையாற்றி
ஏட்டைப் புரட்டும் கலைவாணி ராணியென்பார்
மாவட்ட அளவிலே நடுநிலைப் பள்ளிகளை
ஒருங்கிணைக்கும் பணியிலெ ஓய்வின்றி செயலாற்றும்
அருமை அம்மணி ராணியாரே வருகவென்பேன்.

பயிற்சிக்கு ஆயத்தமாய் பாய்ந்தோடி வந்தமர்ந்து
பக்குவம் அடையவந்த ஆசிரியப் பெருமக்களே!
அழைப்பிலே தப்பினாலும் தப்பாமல் வருகைதந்த
அத்துனை பேரையும் வரவேற்றேன்.
வணங்கினேன் நன்றி. வணக்கம்.

(2001 -'03) தஞ்சாவூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றியபோது தஞ்சை நகர நடுநிலைப் பள்ளிகளில் ஜெ.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாமில் வரவேற்புரை.

ஜெ.ஆர்.சி துவக்கம் - தஞ்சை ஊரகம் - வாழ்த்துரை

செஞ்சிலுவைச் சங்கமது அனைவருக்கும் சொந்தம் - ஆனாலும்
தஞ்சை நகரில் மட்டுமே சுடர்விடக் கண்டேன் - அதனொளி
சிறிது ஊரகத்தில் கண்டேன் எட்டிப்போக ஏதுவில்லை.
பள்ளிகளில் ஒருங்கிணைப்புப் பணியேற்று
நகரளவில் சுடர்கண்ட சுடர்மணி யாரென்றேன் - அது
நம்மிலொரு சோதரி ராணியென்றார்.

நகராட்சிப் பள்ளியிலே நற்பணி ஆற்றிவரும்
நிகரற்ற இப்பணிக்கு என்னினிய வாழ்த்துக்கள்.
சுறுசுறுப்பு, சாதுர்யம் இவ்விரண்டோடு
தன்னம்பிக்கை மற்றும் தன்னார்வத் தொண்டுள்ளம்
இவைகொண்ட ராணியை வண்டார் குழலியார்
ஏணி என்றார் தோனி என்றார்.

நானொன்றும் கூறுவேன் நயமாக.
உமது தொண்டென்றும் ஊறும் கேணியாகவும்
இருக்கட்டும் எனக்கூறி வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்!
வளர்க நின் தொண்டு!

=> (2001 -'03) தஞ்சாவூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றியபோது தஞ்சை நகர நடுநிலைப் பள்ளிகளில் ஜெ.ஆர்.சி தொடக்க விழாவில் வாசித்தது.

ஜெ.ஆர்.சி துவக்கம் - தஞ்சை மாவட்டம் - வாழ்த்துரை

தஞ்சை மாவட்டம் - இது தரணிபுகழ் மாவட்டம்.
தரணி பாடிய பாட்டிலே தவழ்ந்ததின்று பாவாடை.
கல்யாணசுந்தரம் கவிபாட வெள்ளித்திரை வெற்றி கண்டது.
இம்மண்ணில் மிதித்தாலே பாமணக்கும் நாமணக்கும்
எண்ணச்சூழல்கள் என்றென்றும் எழில்காணும்.
இன்று கண்டோம் பள்ளிச் சிறுவர்க்கோர் செஞ்சிலுவைச் சங்கம்.
சிறப்புக் கருத்தாளர் இருவர் - இவர்களை
பாமணம் கமழும் மண்ணில்சிறு கவிதையால் வாழ்த்த ஆசை.

அவை வணக்கம். ஆவலாய் வீற்றிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
வண்டார் குழலி வாய்மை பெற்றார் - அவர்தம் திறனைக் கண்டார் ஈங்கிலர்.
தமிழண்ணை அவர்தம் நாவில் தவழ்கிறதா
அல்லது மாயஜாலம் புரிகின்றதா?
தந்தை மணிவாசகம் பெற்ற செல்வி
அன்னார் அருள்வாக்கு நிறைந்த செல்வி.
பாரில் புகழொடு தோன்றுக - இது வள்ளுவர் வாக்கு;
வேரின் அடியோடு தோண்டுக - இது அம்மையார் நோக்கு.
இயற்கையோடு நாமிருந்தும் - உடல் இன்னலுறும் வேளையிலே
இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி
எங்கெங்கோ அலைகின்றோம் - எண்ணத்தில்
ஏதும் அறியார்தம் நிலைகொண்டோம்.
அம்மையார் திறமை என்னவென்பேன்!
சோதனைகள் பலசெய்து சாதனைகள் சிலகண்டார் - உடல்
வேதனைகள் நீக்க நல்லபல வழி சொன்னார்.
தான்கூறும் கருத்துக்களை நான்கேட்க ஏக்கம் கொண்டார்.
தன்னையும் அறியாமல் குழந்தை தாலாட்டும் பாடிவிட்டார்.
அவர் வருவாரா? வருகை தருவாரா? - இது தாலாட்டன்றோ!
வாழிய நின்புகழ்! வளர்கநின் தொண்டு.

மதுரைக்கொரு மீனாட்சி - தஞ்சை மண்ணுக்கொரு மாணிக்கவல்லி.
அவர்தம் புதல்வன் கிரேட் மவுன்டன்.
பரந்த அறிவு - பண்பட்ட ஆண்மீகம் - பார்வைக்கு எளிமை.
மலரிருக்கும் இடமெல்லாம் வண்டினம் தானாய்வரும் - அந்த
வண்டினம் மொய்க்கும் குழலி வண்டார்குழலி - இவருடன்
வம்பிழுக்க வந்துள்ளார் மாணிக்கவல்லி.
உடல்வளம் பெருக உள்ளத்தின் வலிமைகூட
தன்வழியும் கேளீர் என்றார்.

சோதனையும் வேண்டாம் சானையும் வேண்டாம் - உடல்
வேதனை நீக்க தன்வழி முயன்றுபார் என்றார்.
மூலிகை வேண்டாம் - தினம்அரை நாழிகை போதுமென்றார்.
மனதை அடக்கு என்றார் மகிழ்ச்சி பொங்குமென்றார்.
உடலை வணக்கு என்றார் உள்ளம் துள்ளுமென்றார்.
வேதத்தின் சுடரொளி கீதை - பைபிள் - குர்ஆன்
யோகத்தின் சுடரொளி திரேக யோகம்.
யோகம் செய்தால் உடலும் வலிமை பெறும் என்றார்.
மூலிகையே வேண்டாமென்றார்.

இவ்விரு மருத்துவரை மேடையேற்றினோம்
அவர்தம் செயல்விளக்கம் கண்டோம் - தெளிவடைந்தோம்.
கல்வியா - செல்வமா - வீரமா - இது அன்றைய வாதம்.
மூலிகையா - யோகமா - இது இன்றைய வாதம்.
முடிவெடுப்பது உங்கள் கையில் - முன்மொழிவேன்.
நான்ரெடி. நீங்கள் ரெடியா?

=> (29.11.2001) தஞ்சாவூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றியபோது கும்பகோணம் வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஜெ.ஆர்.சி தொடக்க விழாவில் வாசித்தது.

மணமக்கள் வாழ்த்து

மணமகளே மணமகன்தன் மனங்கவர்ந்த இளமனமே,
குணமகளே, குலந்தழைக்கக் கரங்கொடுத்த திருமகளே,
கனவனைநீ தினம்வணங்கி கருத்திலவன் மனமறிந்து,
பணிவுடனே பணிசெய்து பல்லாண்டு வாழியநீ!

மணமகனே! மனமகள்தன் கரம்பிடித்த திருமகனே,
மணமகளை அடைந்திடநீர் தவமிருந்த கதையறிவோம்;
மனதினிலே நினைத்தவளை மணமேடை தனில்கண்டீர்,
கனிவுடனே கருத்தொன்றி கடலலையாய் வளம்பெறுவீர்.

பூமுடிந்த நார்மணக்கும் நார்பிடித்த கைகடுக்கும்,
நான்தொடுக்கும் சொல்லினிக்கும் சொல்புரண்டால் பொருள்மாறும்,
நானெதையும் சொல்லிடுவேன் நயமுடன் கேட்டிடுவீர்
ஆனாலும் ஏனோநான் அளவோடு வாழ்த்துகிறேன்.

வெற்றித் திருமகளை வினைதீர்க்கும் பெருமகளை
உற்ற பெயரினிலே உள்ளடக்கும் ஜெயபாலே,
கொற்றவன் தான்பெரியன் பொய்யில்லை யானாலும்
கொற்றவனை யேயடக்கும் ராஜரா ஜேஸ்வரியே,

கற்றறிந்த பெரியீரே பட்டறிவில் மூத்தோரே,
கற்றவித்தை சிறிதளவே கல்லாத துலகளவே,
உற்றதொரு தருணத்தில் ஓரிரண்டு சொல்லாலே
நற்றவத்திரு மணமக்களை நான்வாழ்த்தி அமர்வேனே.

=>1970-ல் திரு ஜெயபால்(பட்டதாரி ஆசிரியர், அச்சம்பட்டி உயர்நிலைப்பள்ளி)
அவர்களின் திருமணத்தில் வாசித்தது)

புத்தாண்டே வருக

தெள்ளுதமிழ் வள்ளுவனை, சிலம்பார்த்த இளங்கோவை
தந்ததமிழ்த் திருநாடே,
கள்ளவிழும் மலர்க்கூந்தல் கண்ணகிதன் கற்பதனை
உலகறியச் செய்தாய்நீ.
பிள்ளைமுகம் கண்டுருகும் தாய்க்குலத்தின் புகழதனை
தரணிக்கு எடுத்துரைத்தாய்;
உள்ளதையே உள்ளபடிச் செப்பிடும் பண்பதனை
உலகெங்கும் பரப்பிடுநீ.

செந்தமிழின் சுவையறிந்து செம்மையுடன் அதைக்காத்த
அமரர்பெரும் அண்ணாவை,
நந்தமிழர் இனம்காக்க நாளெல்லாம் உழைத்திட்ட
உண்மையன்பு உத்தமரை,
சொந்தமிலை இனியெமக்கு என்றெண்ணி எம்மின்றும்
பிரித்தகன்னி 'கீலக'மே!
பந்தமினி உன்னோடு வேண்டிலன்நீ பாவியடி!
சென்றவிழ்க இன்றேநீ.

வாராயென் 'சவுமிய'மே! வருவாயென் புதியவளே!
வழிநின்று வரவேற்றேன்;
பாராயென் புன்னகையை, பாசமது குறையமல்
பணிவோடு வணங்கிட்டேன்;
தாராய்நீ வளமான தரணிபுகழ் வாழ்வதனை
சிரந்தாழ்த்தி வேண்டுகிறேன்;
தீராத மனக்கவலை தீர்த்திடுவாய் இன்றேநீ
தினமுன்னைப் பாடிடுவேன்.

அண்ணாவின் பைத்தியமும் அன்பிற்கு வித்தான
இந்நாளின் வாத்தியாரும்,
பொன்னான மனங்கொண்ட பொற்கொடிநற் றங்கையினைப்
பொன்மேனிச் செல்விதனை,
எந்நாளும் மறவாமல் எண்ணமதில் நின்றிலங்கும்
இன்றமிழர் புத்தாண்டாம்,
இந்நாளில் இனிதான இன்சுவையின் சொல்லமுதாய்
வாழ்த்துகின்ற வகையிதுகாண்.

அன்புடையோய் அருமைமிகும் பண்புடையோய்! கள்ளமிலா
மழலைச்சொல் கனிவுடையோய்!
நின்றிலங்கும் நின்புகழும் நித்தமினி ஓங்கிடவே
நீமகிழ்ந்து வாழ்ந்திடுவாய்;
நன்குதமிழ் வளமறிந்து நாடெல்லாம் எடுத்துரைக்க
நமதன்னை அழைக்கின்றாள்;
சென்றுநனி முன்னின்று சேர்த்துவிரு கரங்கூப்பி
செயல்படுநற் றுணைபெற்று.

உதயத்தின் பகலவனை வரவேற்கும் பாங்கோடு
புத்தாண்டே வாவென்று
இதயத்தின் ஒருபகுதி இனிதாக மலர்ந்தாலும்
இன்னமுள்ள மறுபகுதி
இதயத்திற் குடிபுகுந்த இன்னுயிராம் தங்கையுனை
வழியனுப்ப மறுத்திடுதே!
முதலுக்கும் முடிவுக்கும் மூண்டுவிட்ட போரதனை
இனிதொடுக்க யார்வல்லார்?

=> தமிழ் வருடம் கீலகம் முடிந்து சவுமியம் பிறந்த நாளினை வைத்து தினமணி நாளிதழில் வெளியிடப்பட்டது.

Thursday, November 24, 2011

*ஐந்தாண்டு திட்டங்களின் பயன்கள்*

திட்டங்கள் பலதீட்டிப் பயனென்ன வென்றேதான்
மட்டமுடன் பேசிவரும் மாபெருமோர் குழாமின்று
இட்டபணி செய்வதன்ன இடையின்றி நல்லியல்பின்
நட்டமின்றிச் செயலாற்றும் அரசின்புகழ் அறியாதோ?

திட்டமின்றி எத்தொழிலும் ஈடேறா தென்றுணர்ந்து
பட்டறிவு துணைகொண்டு பாரினிலே உயர்ந்தோங்க,
உற்றதொரு தருணத்தில் முப்பெரும்நல் ஐந்தாண்டுத்
திட்டங்கள் தானியற்றி நாடடைந்த பயன்காண்போம்.

எத்திசையில் நோக்கினும்நாம் எழில்மிக்க தொழில்வளத்தைச்
சித்திரத்தைக் கண்டுமனம் துள்ளுமே யதுவன்ன,
தித்திக்கும் கரும்பதனைச் சுவைத்தறிநா சுழல்வதன்ன,
முத்தினெழு ஒளியெனவே லயித்தேநாம் மகிழாமோ?

தாவரங்கள் தமக்காகப் பண்பட்ட உரப்பொருளை
நாடெங்கும் பெருக்கிவரும் தொழிற்சாலை பலவாகும்.
பாடுபடும் பாட்டளி மக்களது பயன்பெருக்கும்
ஆய்கருவி தமைச்செய்யும் தொழிலகங்கள் சிறிதாமோ?

அறிவியல் விரிவடைந்து அதிசயம் பலநிகழ்த்த
சிறிதேனும் தயங்காமல் உதவியுடன் ஊக்குவிக்கும்
குறியொன்று சிதையாமல் குன்றாகக் குவித்துவரும்
சரிவற்ற பொருளதனைச் சகலரும் வியவாமோ?

ஓரிடத்தில் நாமுள்ளோம் வேறிடத்தில் உறவுண்டு
யாரிடமும் நடைபயின்று நாம்செல்லும் நிலையில்லை.
பாரினிலே பயனளிக்கும் அதிசயங்கள் பலநிகழ்த்தும்
ஊர்திகளும் சிறிதாமோ திட்டங்களின் பயனதிலே!

அறிவென்ற அரும்பொருளை அனைவருமோர் சமநிலையில்
பெரிதளவிற் பெறுதற்கே யமைந்துள்ள பள்ளிபல.
நெறிதவறா முறையுடனே அப்பள்ளி மாணவரும்
விரிமனதின் மாணவியர் பலருந்தான் பயனடைந்தோர்.

கல்விதனைக் கருத்துடனே காலமெலாம் கற்போர்க்கு,
தொல்லுலகைக் காக்கும்பல தொழில்கள்தமைப் பயில்வோர்க்கு,
அல்லலுறும் நிலையினிலே பள்ளியர்தாம் அனைவருக்கும்
துள்ளிவரும் பொருளுதவி திட்டங்களின் பயன்தானே?

கோடிகோடி என்றுபெரும் பணமதனைச் செலவிட்டு,
நாடிநின்ற மக்களது தேவைகளை உடனளித்து,
கூடிவரும் நம்மினத்தை நோயின்றி காத்திடவே
ஓடியோடி யமைத்துளது மருந்துமனை பலவற்றை.

நோயென்ற பயமில்லை நோவதற்கே இடமில்லை
தாயென்றும் தன்னருகில் தனித்திருந்து காப்பதுபோல்
ஓய்வென்றும் கொள்ளாது ஓயாத கடமையுடன்
ஆய்ந்தறிந்து அகற்றிடுமே அரசின்று நோயதனை.

மின்சாரந் தனைக்கொண்டு வீடெல்லாம் விளக்கேற்றி,
தன்சிறிய நிலமகட்கும் எளிதாக நீர்பாய்ச்சிப்
பண்படுத்தி பக்குவமாய் பலன்முற்றும் தான்பெற்று
நன்முறையில் வாழுமின்று நாடுகொண்ட இடமெல்லாம்.

மாபெரும் நிலையடைய நற்செயல்கள் பலவுடனே
காடுதரும் கனியதனைக் கனிசமுடன் உயர்த்திடவே
பீடுதரும் அணைகள்பல பெருமளவில் அமைந்தின்று
வீடுதனில் அமர்ந்தினிது களிபெய்து வாழுகின்றோம்.


=>1964-'65 ம் ஆண்டு விருதைக் கல்லூரி திட்டமன்றம் நடத்திய கவிதப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

கோட்டை சரிந்தது

மனத்திரையில் மாற்றமதை விளைவித்த மாமணியே!
எனக்கிருக்கும் ஓர்மனதில் ஒளிந்திருந்து வரும்நிலவே!!

எதையெதையோ நானெண்ணி என்மனதில் கோட்டைபல
எழிலுடனே கட்டினனே!
கதைமுற்றும் மாறியதும் கனிந்தமுகம் வாடியதே
என்னிதயம் ஏங்கிடுதே!
பதைபதைக்கும் என்னிதயச் சுமையதனை யார்துணையால்
இறக்கியொரு விடை காண்பேன்?
இதையுமென் விதியென்று சொல்லிடவா இல்லைஒரு
விளையாட்டு என்றிடவா?

தேன்கலந்த தெள்ளமுதும் தெவிட்டாத சொல்லமுதும்
வாரிக் கொடுக்காமல்
மான்மருகும் பார்வையுடன் வேல்தாங்கும் கண்ணிமைகள்
கூடிக் களித்திடவே,
வானொளிர நின்றநிலா முகந்தாங்கி முன்னின்று
புன்னகைத்த பொருளென்ன?
மீன்விழிகள் மின்மினிபோல் தாம்விளங்கத் தனிமையிலே
தலைகுனிந்த பொருளென்ன?

காந்தமென இருவிழிகள் கவர்ந்திழுக்க ஒருமுகமாய்
கலங்குகின்ற தென்மனதும்,
சேர்ந்திரண்டு கருவிழிகள் சிவந்திடுமோர் முகமதிலே
சிரிக்கின்ற நிலயேனோ?
கூர்ந்தமதி முகமதையே குறைவின்றி பார்த்திருந்தும்
குறைகண்ட நிலைதானா?
நீர்தழும்ப நின்றழுவேன் தினமிரண்டு பார்வையுடன்
யானெதையே செப்பிடுவேன்?

கொஞ்சாமல் கொஞ்சிவிளை யாடியவென் இதயத்தை
என்சொல்லித் தேற்றிடுவேன்?
நெஞ்சாரக் கூறிடுவேன் நோகாத என்னிதயம்
நோகாமல் நொந்தழுமே!
அஞ்சாத உளமதிலே அமைதிபெற வழியிலையே
ஆறுதலும் சிறிதிலையே!
பிஞ்சாகிக் காயாகிக் கனியாத நிலையதனை
யாரிடம்போய் சொல்லிடுவேன்?

ஏறிட்டுப் பார்க்கின்றேன் எட்டிநின்று ஏங்குகிறென்
எத்தனைநாள் இந்நிலையோ?
போரிட்டுப் பார்க்கின்றேன் பொல்லாத மீன்விழிதன்
பொற்கதவுத் தாழிடுதே!
யாரிட்ட சாபமிதோ யானெந்தன் மதியிழந்து
யாசிக்கும் நிலைகண்டேன்!
சோதித்த நிலைபோதும் சொல்லிடுக பொன்மனதிற்
பொதிந்துள்ள பொருளதனை.

=>1964-'66 கல்லூரி நாட்களில் பல நண்பர்களுடன் பழகிய அனுபவத்தில் எழுதிய கற்பனைக் கவிதை.

அட மனமே, வருந்தற்க

மனத்திரையில் மாற்றமதை விளைவித்த மாமணியே!
எனக்கிருக்கும் ஓர்மனதைப் பண்படுத்திய நற்றிருவே!!
குணக்குன்றே! குறுநகையே!! கொந்தளிக்கும் பெருங்கடலே!!!
மனத்தகத்தே உதிக்கின்ற எண்ணமதைச் செப்பிடவா?

மாசறுநல் மடலதனை மனமாற நானேற்றேன்,
நேசமுடன் அதில்காணும் சொல்லனைத்தும் நல்லவையே;
பாசமது குறையாமல் பரிவோடு பேசினனே!
சூசகமாய் நேற்றாங்கோர் கேள்விக்கணை வீசியதேன்?

"என்மீது கோபமோ? எரிகின்ற தூபமோ?"
என்னுமொரு கேள்விக்கணை எனைநோக்கிப் பாய்ந்ததையே
பன்முறைதான் சிந்திதேன்; புண்பட்ட என்மனதில்
இன்னதுதான் பொருளென்று இன்னும்விடை பெற்றிலனே.

அஞ்சாதென் ஆருயிரே! அன்புளச் சகோதரியே!!
நெஞ்சாரைக் கூறிடுவேன் நேசமது குறையாது;
பிஞ்சாகிக் காயாகிக் கனியாது போனாலும்
எஞ்ஞான்றும் உளமதிலே ஒளிவீசி நிறை காண்போம்.

என்னகத்தே அன்றெழுந்த உணர்ச்சியின்று உள்ளடங்கி
என்னோடே இருக்கட்டும் என்றெண்ணி மறைத்தாலும்
கண்ணீரைத் தொட்டிதயம் கனிவோடு இம்மடலை
எணணாமல் எழுதுவது ஏனென்றே தெரியவில்லை.

"உயர்திரு அண்ணா"வென உற்றதொரு மடல்தொடங்க
அயர்ந்ததுவே என்னுடலம் அண்டமெலாம் இருள்சூழ;
புலம்பியது என்நாவும் பொங்கியது கண்ணீரும்;
இளந்தென்றல் சென்றேகப் புயலங்கே பிறந்ததுவே.

மடலதனைத் தொடருங்கால் மனம்விட்டுக் கதறியதை
உடனிருந்து யாரானும் என்நிலையைக் கண்டிருந்தால்
குடந்தாங்கிக் கண்ணீரால் நிறைத்திடுவர் நின்றாங்கே.
"அடமனமே! வருந்தற்க அதுவொன்றும் நடக்கவிலை"

என்றெனக்கு நானேநல் அமைதிதரும் சொல்பகன்றும்
நின்றதையே நினைந்தழுத நிலைகொள்ளா மனத்தோடு
நன்றதையே சிந்தித்து நான்கிதழின் மடலதனை
அன்புடனே ஏற்றேன்யான் அலைமோதும் மனதுடனே.

அன்றிரவு முற்றிலுமே துயிலில்லை துக்கமது
வந்தென் நெஞ்சடைக்க; அடுத்தநாள் முழுவதுமே
உண்டிடவோ மனமில்லை, உண்டதிலும் சுவையில்லை,
கண்டவர்தம் ஐயம்போக்கக் கரும்வேம்பாய் சிறிதுண்டேன்.

நிலவதன் ஒளியும்செந் நெருப்பாகப் பட்டதுவே,
மலரதன் மணம்கொல்லும் நெடியாகப் பட்டதுவே,
நலங்கெட்ட உளம்பெற்றே நானின்றும் அலைகின்றேன்,
குலமிட்ட திரைக்குப்பின் மதிகெட்டுத் தவிக்கின்றேன்.

பெண்ணுள்ளம் பேதமுறும் என்றஞ்சி முடிக்கின்றேன்.
இன்னும்பல வேதனைகள் என்னிடமே இருக்கட்டும்;
அன்போடு எனைக்காணும் போதெல்லாம் ஆனந்தக்
கண்ணீரைச் சொட்டுதலே எனக்களிக்கும் ஆறுதலாம்.

=>1964-'66 கல்லூரி நாட்களில் பல நண்பர்களுடன் பழகிய அனுபவத்தில் எழுதிய கற்பனைக் கவிதை.

சோதரியே! வாழ்கநீ பல்லாண்டு

அன்புளங்கள் இணைந்திடவே ஆயிரம்நாள் வீ ணாகும்
என்பதனை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையினிலே
அன்றொறுநாள் பள்ளியிலே அதுவும்சில நொடியினிலே
என்றும்மற வாவகையில் இணைந்தனவே நம்முளங்கள்.

திருமகளாய் முன்தோன்றி மாசனைத்தும் நீக்கியதோர்
முறுவல்நிறை முகங்காட்டி முத்தமிழின் மணங்கலந்து
வருகவெனக் கைகூப்பி வணக்கமெனத் தமிழ்மரபில்
வரவேற்ற சோதரியே! வாழ்கநீ பல்லாண்டு.

முன்பின்னறி யாதிருந்தும் முகமதைப்பா ராதிருந்தும்
அன்புடைநற் றோழியவள் மனங்கவர்ந்த கள்வனெனப்
பண்புடனே வரவேற்றுப் பணிசெய்த மாட்சியினை
என்சொல்லிப் போற்றிடுவேன் எங்கனமதை மறந்திடுவேன்?

உன்னுடலம் நலம்தானா உறவெல்லாம் சுகம்தானா?
தங்கையவள் தம்பியுடன் தாய்தந்தை நலம்தானா?
திங்கள்பல உருண்டோடி திரும்பிப்பா ராவிடினும்
தங்குநலம் கேட்கிறேன் தனயன்நிலை பரிதாபம்.

ஓரிருநாள் முன்புயான் உனதன்புத் தோழியவள்
ஊருக்குச் சென்றாங்கே நாலரைநாள் இருந்திட்டேன்.
நீவிடுத்த மடலதனை அவளெனக்கும் காண்பித்தாள்
யார்செய்த நாற்பயனோ மகிழ்வுற்றேன் மறுகனமே.

மடல்தீட்டிப் பத்திருநாள் முன்கேட்ட முகவரியை
கடல்தன்னில் கண்டெடுத்த கரியமணி முத்தெனவே
உடன்கண்டேன் அம்மடலில்; உவகைமிகுந் துளமாற
விடத்துடித்த முதன்மடலை முகம்மலர்ந்தே ஏற்பாயே.

தவறிழைக்கும் வழியினிலே செல்லாது நம்மன்பு
எவர்வரினும் இயலாது இதற்குமொரு தடைபோட
உவகைமிகு என்மனதில் எழுந்துள்ள பேரார்வம்
கவர்கின்ற காந்தப்புலம் போலென்றும் பெருகிடுதே.

அளவின்றி மடல்நீண்டால் அதுவும்சில நிலைதாண்டி
வளவளக்கும் எனக்கருதி வரையரையீங் கிடுகின்றேன்;
தளராது நம்மன்பு தனியாது அதன்வலிமை,
உளமாற நேசத்தை உரமிட்டே நாம்வளர்ப்போம்.

=> 1964-'66 கல்லூரி நாட்களில் பல நண்பர்களுடன் பழகிய அனுபவத்தில் எழுதிய கற்பனைக் கவிதை.

புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி

அன்றேநான் சிறுவயதில் ஆரம்ப நிலையினிலே
நன்றேதான் பயிலுங்கால் பாலரிளம் பள்ளியிலே
ஒன்றேநாம் இருவருமே என்றசொல் எழுந்திடவே
நின்றேநாம் இணைந்தோமே நீண்டதோர் வாழ்வினிலே.

நான்சென்ற இடமெல்லாம் நடமாடும் நிழல்போல
நீயெந்தன் பின்நடந்து நிலைகொள்ளா மனதுடனே
ஓய்வென்றும் கொள்ளாது ஓயாத செயலினிலே
பாய்ந்தோடிப் பங்கு கொண்டாய் பாங்குடனே.

நான்மட்டும் குறையாமோ நன்னட்பை வளர்த்ததிலே
தூண்போன்று உன்னருகே தூயதொரு மனத்தோடு
மான்போன்ற பார்வையினை நானள்ளிப் பருகிடவே
வீண்போகாப் பணிகளிலே விரைந்தேநான் ஆற்றினனே.

இன்பத்தைக் கண்டவுடன் எல்லையின்றி மகிழாதே
துன்பத்தைக் கண்டவுடன் துளியேனும் வருந்தாதே
என்றதொரு கொள்கையினை எளிதாக உணர்ந்தாங்கே
நின்னிடத்தில் நான்சொல்ல என்னிடத்தில் நீசொன்னாய்.

இம்முறையில் நாமிருவர் இணைந்திருந்து சிலகாலம்
நன்முறையில் பயின்றேதான் வெற்றிகண்டு மகிழ்ந்தோமே!
கள்ளமிலா நட்பொன்று காலமெல்லாம் நீளாமல்
அல்லலுறும் நிலைகொள்ளப் பிரிந்தோம்சில நாள்முன்பு.

நீயெங்கோ பயில்கின்றாய் நினக்குறிய இடமதிலே
நானெங்கோ நிலைகொண்டுத் தொடர்கின்றேன் உயர்படிப்பை
நாமிந்த நிலையிலின்று நாவளவில் பேசிடவும்
ஓர்சிறிய வாய்ப்பிலையே ஓரிடத்தில் வசித்தாலும்!

தவறிழைக்கும் வழியினிலே செல்லாது நம்மன்பு
எவர்வரினும் இயலாது இதற்குமொரு தடைபோட
இதன்பயனால் என்னிடையே எழுந்துள்ள பேரார்வம்
அளவின்றி என்மனதில் ஏக்கமதை வளர்த்திடுதே.

என்றெங்கே மீண்டும்நாம் பேசிடவோர் வாய்ப்புவரும்
என்றேதான் தவித்திட்ட நாளினிலே நேற்றென்னை
அன்பின்பிடி மாறாத அளவிலா நாணத்துடன்
தங்குபெரும் புத்தாண்டு வாழ்த்துக்கு என்நன்றி.

=> 1964-'66 கல்லூரி நாட்களில் பல நண்பர்களுடன் பழகிய அனுபவத்தில் எழுதிய கற்பனைக் கவிதை.

*கணிதமா அறிவியலா?*

கணிதம்: அறிவியலே! அறிவியலே! உனையாரும் புரிந்திலரே-இதை
அறியாமல் ஏனுனக்கு இப்புவியில் வீண்பகட்டு?

அறிவியல்: கணிதமே! கணிதமே! நானென்றும் புனிதமே-ஒரு
கனிந்தசொல் இயம்பாது கடிந்தென்னைப் பேசுவதேன்?

கணி: பொய்யாகும் உன்சொற்கள் போதைதரும் உன்மழலை
மெய்யாகக் கூறிடுவேன் மேன்மைதரும் என்பயனே.

அறி: ஐயோ! இது அபசகுணம் அறியாமை தரும்மயக்கம்
மெய்யாககக் கூறிடுவேன் மேன்மைதரும் என்பயனே.

கணி: நானின்றி நீயில்லை நாளென்றும் இதைமறவாய்
பேனிடுவர் என்நலமே பேரறிஞர் பலர்யாண்டும்.

அறி: என்னறிவு இல்லையெனில் ஏதுலகில் நின்பெருமை?
ந்ன்குணர்ந்து பார்ப்போர்க்கு நானன்றோ முந்தியவள்?

கணி: இல்லையடி இன்மலரே இனிதுடனே கேட்டிடுவாய்.
நல்லதொரு அறிவதனை நாளென்றும் நீதந்தாய்.
இல்லயெனக் கூறிலன்யான் இனியவளே! இருந்தாலும்
சொல்லியவுன் சொல்லனைத்தும் செயல்முறையில் காட்டிடுமோர்
வல்லமைதான் உனக்குண்டோ? வாய்த்துளது எனக்கதுவும்.

அறி : எங்கனமென எடுத்தியம்பின் எனக்கதுவும் நலமாகும்.

கணி: ஒன்றிரண்டா எடுத்தியம்ப ஒழுங்கமைந்த வரிசையிலே?
நன்குணர்ந்து பார்ப்போர்க்கு நல்லறிவின் பௌதிகமே,
என்துணையோ டிணைந்தேதான் இன்றளவும் வளர்ந்துளது;
என்றென்றும் இந்நிலைதான் எள்ளளவும் ஐயமில்லை
என்பதையும் மறுக்காமல் ஏற்பாயென் மணிமொழிநீ.

அறி : அஞ்சுகிறேன் என்னுயிரே! அழகான விளக்கம்தான்-ஆனாலும்
நெஞ்சிலொரு கரம்வைத்து நேர்மையுடன் நினைந்திட்டால்
கொஞ்சமது உறுதிபெற்றுக் கொல்லைவழி வந்ததொரு
பூதமென எண்ணாமல் போற்றியது நினையுலகு?

கணி: செப்பியவுன் சொல்லனைத்தும் செப்பறிய உண்மைதான்.

அறி : பின்னறேன் பிணக்கமினி பிரியாநம் உளமதிலே?

கணி: உண்மையதைப் பகன்றிட்டாய் உளமாறக் கனிந்திட்டேன்.
நன்மைபெறும் இவ்வுலகு நம்மிருவர் இணைப்பில்தான்;
கன்னியுனைக் குறைத்தேதான் பேசியசொல் பெரிதாக்கி,
என்மனதைப் புண்படுத்தும் சொல்லேதும் சொல்லற்க.
விண்ணுலகில் ஒன்றிணைந்து வீரநடை போட்டிடுவோம்.

கணி & அறி: ஆம்.
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை
தீதறுநல் உளமோடு இணைந்தொன்றாய் இயங்கிடுவோம்.

=> இயற்றிய நாள்: 09.03.1969
(06.03.1969 'பட்டதாரி ஆசிரியர்' ஆண்டு மலரில் வெளியிடப்பட்டது)

*LOVERS IN THE SKY*

O, Moon! where and when should I search for you

To have a glance of thy gracious face?

Why should thou, today, look so pale in colour,

Without showering cool light on earth's floor?

Are thou having any pain in your mind,

Which neither I nor any can easily find?

But I, being an innocent child of heaven,

Can, at least, guess why thou shouldst be so.

Thou art in love with the great lord Sun,

Who looks at others as things that are fun.

When thou do appear in the sky with grace,

He doth vanish completely from thy sight.

Thy search for him at last makes thee cheated,

Which results in thy face getting pale coated.

If thou stayest with sorrow in thy home,

He doth drive in the sky to spread his fame.

I do feel so sorry for thy state

That I am eager to do a lot.

Shall I take you to his castle to meet him?

For, I know well where and when he stays.

Or, shall I bring him before thy shining thy palace?

What should I do for thy sake, tell! Tell me.

=> This poem was published in the Annual sovenir of Thiyagarajar College of Preceptors, Madurai during 1967-'68.

*வள்ளுவன் காட்டும் வழி*

வள்ளுவனே நல்லவனே வான்புகழும் பெரியோனே!
உள்ளுவனே உனையாண்டும் உளமாற நானென்றே
தெள்ளமுதின் சுவையோடு எனைவாழ்த்தும் அன்புடையோய்!
சொல்லிவரும் என்னருஞ்சொல் சிலகேட்டுச் செல்வாய் நீ.

வம்பளக்க விழையாதே வாயடக்க மறவாதே
தெம்பளிக்கும் தேன்தமிழில் தெவிட்டாத சுவையுடனே
நம்பமுடி யாதசொல் நாவினின்று நீக்கியதோர்
உம்பரிலே உனையேத்தும் உண்மையினைப் பகன்றிடுவாய்.

கைநிறையப் பணமிருந்தும் கடுகளவும் பயனில்லை
கையேந்திக் கேட்போர்க்கு இல்லையென நீபகன்றாய்.
வையமதில் நீசேர்த்த வானளக்கும் செல்வமதை
ஐயமின்றி நீயளித்தால் அதுவேயுன் செல்வப்பயன்.

அன்பொன்று அமைந்திட்ட நிறைவான உன்வாழ்வில்
பண்பென்றும் குறையாமல் பணிவோடு நீவாழ்வாய்.
துன்பத்தில் உழன்றேங்கும் வறியோரைக் காப்பதிலே
இன்பத்தின் ஈற்றெல்லை நீகண்டு மகிழ்வாயே.

வருவிருந்து பார்த்தெதிரே வாவென்று நீயழைத்து
சிறுவிருந்து தானென்றும் சிறுமைதனைப் பாராமல்
பரிவுடனே சிலசொற்கள் பண்போடு நீகூறி
ஒருகுறையும் நேராமல் ஓம்பிடுக ஒருமனதாய்.

உற்றதோர் தருணத்தில் உனைக்கண்டு மனமுவந்து
மற்றெந்த நலமெதையும் எதிநோக்கா துனக்களித்த
சிற்றுதவி தானெனினும் சிறந்ததோர் நன்றியுடன்
பெற்றதொரு செல்வமெனப் பேர்சொல்லி வாழ்வாயே.

கல்விதனைக் கற்றுக்கொள் காலத்துடன் ஒட்டிக்கொள்
பல்வினைகள் ஆற்றிடவும் பாரினிலே கற்றுக்கொள்.
நல்வினைகள் சிலவேனும் நாட்டிற்கு நீயாற்றிப்
பல்லுயிர்கள் உனைப்போற்றூம் புகழினையும் ஏற்றூக்கொள்.

உரமுண்டு உடலினிலே உணர்வுண்டு உளமதிலே
கரமுண்டு குறைவினிலே கழனியிலே உழைத்துன்பாய்.
பிறர்பொருளில் மனங்கொண்டு பித்தனாய் மாறாமல்
அறநெறியிற் சிறிதளவும் பிழையாது வாழ்வாய்நீ!

நாலிருபேர் நடுவன்நீ நல்லியல்பின் தலைவனெனில்
மேலிருந்து மென்மேலும் உன்நிலையைக் காத்துக்கொள்.
நாளறிந்து இடமறிந்து நற்செயலில் நீயிறங்கி,
ஊழினையும் நீவெல்வாய் உலகினது இயல்பறிந்தால்.

தானுண்டு தொழிலுண்டு தனைச்சூழ்ந்த உறவுண்டு
ஊணுண்டு உறவுண்டு உண்பதற்குக் குறைவின்றி.
ஏனென்று எதற்கென்று பிறர்வம்பில் சேராமல்
நீயென்றும் தனித்திருந்து நிலையாக வாழ்வாயே.

=> 23.11.1965 ல் விருதைக் கல்லூரி இலக்கிய மன்றத்தால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

Wednesday, November 23, 2011

கொடியவள் கொடியவளே

ஆங்கோ ருருவம் காண்பது பாரீர்
பாங்காய் நிலவில் பலநிறத் துடனே!
தீங்கனி யாம்நல் மாங்கனி ஈனும்
ஓங்குயர் மரத்தின் இளஞ்சிறு கிளையோ?

பலரும் பார்த்துப் பெருமகிழ் வெய்தும்
நிலவின் இயல்பை மழைபோ லெண்ணித்
திலகம் மலியும் இறகின் தோகை
உலரும் நிலையில் உளநல் மயிலோ?

வானக முவந்துக் கனிவுடன் காத்த
நானக மகிழ வளமுடன் திகழும்
கானக மெங்கும் களித்தே அலையும்
வானவ ருலகின் அம்புள்ளி மானோ?

அன்றே யன்று அனைத்து மன்று
சென்றே யாங்கு நோக்குவம் சிறிதே
என்றே யானும் எழுந்தே னன்றோ
கொன்றே யென்பல தொழில்தமை யாங்கு.

பத்திரு அடிகள் முன்வைத் தேயான்
அத்திரு உருவின் உண்மைப் பொருளை
இத்திரு மனதிற் கின்னே யுணர்த்த
நற்றிரு மனதாய் நகர்ந்தே னாங்கே.

என்னே வியப்பு என்றிரு வுளத்தில்!
முன்னே காணூம் அத்திரு உருவைத்
தன்னே ரில்லாத் தனியழ குடனே
வின்னே வியக்கும் பெண்ணாய்க் கண்டேன்.

அந்தப் பெண்ணும் அயலவள் அன்றே
எந்தன் மனதிற் கினியவ ளன்றி.
மந்தம் சிறிதென் மனதிற் கண்ட
எந்தன் நிலையை எங்கனம் நோவேன்?

கண்டேன் நேற்றக் காரிகை தன்னைக்
கொண்டேன் அவள்மேல் தனியாக் காதல்
இன்றே யவளை மீண்டும் காணச்
சென்றேன் முன்பே சொல்லிய விடத்தே.

கொடியவள் தன்னை எண்ணப் படியே
மடியினில் இறுத்தி மகிழ்ந்தே நானும்
நொடியினில் அவளை மயக்கிட எளிதாய்க்
கடிதெனச் சென்றேன் அவளோ டருகே.

பரபரப் புடனே நோக்கினா ளென்னை
உறவறி யாச்சிறு சேயென வாங்கே.
கிருகிருப் புற்றேன் அவளெனக் களித்த
திருதிருப் பார்வையில் பெரிதாய்க் குழம்பி.

பொங்கும் அவள்மனப் பொருளெனக் குணர்த்தா
திங்கும் அங்கும் விழித்தா ளாங்கே.
தங்கு மவ்வே காதல் மிகுந்த
அன்பே! என்றவோர் அயலொலி கேட்டேன்.

அடுத்த கணத்தில் அருகிருந் தவளும்
விடுத்த கணைபோல் விரைந்தா ளெங்கோ.
அடுத்தோ ருருவை என்னிடம் இருத்தி
உடுத்தவெள் ளுடையை உலைத்தைது நிலவும்.

மிடுக்குடன் நோக்கிட அந்தப் புதியோன்
திடுக்கிட் டேன்யான் திகைப்பு மிகுந்தே.
ஒடுக்கிட விழைந்தில னவனது செயலை
விடுத்திட என்றன் காதலை யன்றி.

நொந்தே யவள்தன் காதலை எண்ணி
வெந்தேன் என்றிரு வுள்ளத் தகத்தே.
வந்தே யவளெனை ஏய்த்ததை எண்ணிக்
கொன்றேன் எந்தன் காதலை முற்றும்.

படிறறி யாவென் பால்வெண் மனதிற்
குடிகொண் டவள்போல் குறுகிச் சென்றாள்.
துடியிடை என்றோர் அரும்பொரு ளுடைத்தும் - பூங்
கொடியவள் மிகவும் கொடியவள் திணிதே.

=> இயற்றிய நாள்: 16.11.1964
(இது ஒரு கற்பனைக் கவிதை)

நன்றி வாழ்த்து

நேற்றெனக்கு நீயளித்த இன்மனதின் நல்வாழ்த்து
ஊற்றெனத்தான் பாய்ந்ததுவே என்மனதில் இடையின்றி
தூற்றாது அதனைப் பெரும் துச்சமெனக் கருதாது
ஏற்றேன்யாந் இனிதுடனே என்கரங்கள் முன்னேந்தி.

வான்துளிக்கும் மாரிதனைச் செழிப்புடைய கானெனினும்
தானேற்கத் துளியேனும் தயங்காது அதுவன்ன
தேன்கலந்த அமிழ்தமெனத் தெவிட்டாத மனத்துடனே
யானளிக்கும் நன்றிசால் வாழ்த்துதனை ஏற்பாயோ?

எதிர்பாரா வாழ்த்துதனை எதிரேநீ அளித்ததற்கு
மறூவாழ்த்து தனையளிக்கச் சமயமின்றி தவித்தநான்
உடனளிக்க வியலாத தென்குறையோ?

=> இயற்றிய நாள்: 14.06.1964
( 1963-64 ம் ஆண்டு தேர்வில்/ I.B.Sc/ வெற்றி பெற்றதற்கு வாழ்த்தளித்த ஒருவருக்கு மறு வாழ்த்து)

மணமக்களே எழுவீர்

கணப்பொழுதில் கரைசேரா கடமைபல தானாற்றூம்
மணப்படகில் அமர்ந்தேநீர் மர்மங்கள் பலவாற்றி
இணக்கமுடன் வாழப்புகும் இன்மனங்கள் உடைத்தாகி
பிணக்கமின்றி பிறர்போலச் சிறந்தேநீர் வாழ்வீரே!

தமிழ்மண்ணில் தனிலுதித்து தனிச்சேவை செய்திடவும்,
கமழ்கின்ற மணம்மிக்க தமிழ்த்தேன் பருகிடவும்,
இகழ்கின்ற வீணர்களை அழித்தேநாம் ஓங்கிடவும்
புகழீனும் பெரும்பேற்றை எய்திடநீர் எழுவீரே!

=> இயற்றிய நாள்: 24.05.1964
(இக்கவிதை ஆவல்சூரன்பட்டி திரு.வெ. சீனிச்சாமி-விஜயா திருமணத்தின்போது வாசிக்கப்பட்ட வாழ்த்து மடல்)

இரங்கி இறங்காயோ?

மேகமே இந்நிலை மேவிட வேண்டிலன்
தாகமே என்னையுந் தவிக்கவும் செய்திடும்
சோகமே உருவான செயல்பல யானாற்ற,
நாகமே போன்றுநான் நடித்திட நேருமே.

ஆறுடன் யாவையும் அளவின்றிக் காய்ந்திட
ஏருட நுளாஉம்வே ளாளரு மோய்ந்திட
வீருட நுயிர்காக்கும் வீரரும் மாய்ந்திட
கூருட நுயிர்கேட்குங் கூற்றனும் விழையாங்கொல்.

வானத்தின் வெண்மனம் உறங்கிட நேரிடின்
கானத்தின் கதிர்பல கருகிட நேருமே;
மானத்தின் உயிர்பல மருண்டிட நேருமே;
தானத்தின் தன்மையுந் தரணியில் மாறுமே.

வன்கரம் உடையநல் லுலகினில் யாவரும்
தன்கரம் தனைக்காக்கு மென்பதை நன்கறிய,
உறங்கிய உளம்யாவும் உறுதிகொண் டோங்கிட,
இரங்கி இறங்காயோ இனியநல் மேகமே?

=> இயற்றிய நாள்: 30.11.1963

*கனவோ நனவோ*

அயலே ஒருவன் அலைவது பாரீர்;
அவனே இவ்வூர்க் காலக் கவிஞன்.
கண்டால் போதும் எண்ணிய ஒன்றைக்
கனிவாய்க் கனிவான் கவிமனம் மிகுந்தே.

கேட்டால் போதும் தேடிய ஒன்றைப்
பாட்டாய் பாடிப் பரவச மடைவான்;
காலை தொடங்கி மாலை வரையில்
சோலையி லெல்லாம் சுழன்று திரிவோன்.

வந்தோர் யாரும் வணங்கக் கண்டால்
வாழ்த்திப் பாடிக் களிக்கும் நல்லோன்.
சற்றே முன்பு நடந்த ஒன்றினை
உற்றே நன்கு கேட்டு மகிழ்வீர்.

காலையி லெல்லாம் சோலையி லெங்கும்
புள்ளும் வண்டும் ஒலிக்கக் கண்டான்;
மாலையின் கோலம் மறையும் சமயம்
சோலையின் எழிலில் சொக்கிக் கிடந்தான்.

சொக்கிய வுடனே கனவில் அவனும்
சிக்கிய மகனாய்ப் புலம்பித் தவித்தான்.
"கண்ணெ, மணியே, காதல் மலரே!
பொன்னே உன்னைப் பொருந்துவ தென்றோ?

உன்னை யன்றியிவ் வுலகோர் அடையா
விண்ணே எனினும் வேண்டே னதனை.
என்னை இன்றுநீ கண்டால் என்ன
கண்ணை மயக்குமிவ் வண்ணச் சோலையில்?

பன்னாள் முயன்றும் பருகா மதுவை
இந்நா ளேனும் இனிதே பருகிட
வந்த எனக்கு மகிழ்ந்து நீயும்
தந்து களித்துத் தனித்திடு காதலை"

என்றே அவனும் இயம்பிய நிலையில்
வந்தாள் கமலம் தன்மனப் போக்கில்.
தன்மனப் போக்கில் வந்தவள் அவளும்
இன்மனக் கவியைக் கேட்டாள் சிறிதே.

தன்னைப் பாடிய இன்பக் காதலன்
கண்ணை மூடிப் பாடிக் களித்தான்
என்றெ எண்ணிய அந்தக் கமலம்
ஒன்றே ஒன்று செய்யத் துணிந்தாள்.

சுருக்கென் றவனைக் கிள்ளிய வுடனே
நறுக்கென் றவனும் எழுந்திடக் கண்டான்.
அங்கும் இங்கும் விழித்ததைக் கண்டு
பொங்கும் மனதில் பொருள்படக் காணாள்;

"கனவோ நனவோ கால வினையோ
எனையும் இங்கே இழுத்து வந்தது?
என்றே திகைத்தாள் அவளும். அவனும்
நின்றே வியந்தான், நினைவிழந்தானே.

=> இயற்றிய நாள்: 01.11.1963
(இக்கவிதை 1963-'64 ம் ஆண்டில் வி.இ.நா.செ.நா கல்லூரி ஆண்டு மலரில் வெளியிடப் பட்டது)

*மஞ்சள் மலர்*

பள்ளமன்றிப் பலவரையும் தாவியே விரைந்தோடும்
நல்லகரு மேகமன்ன அலைந்தேன்யான் துணையின்றி.
செல்லும்வழி தனிலேவோர் நீர்மிக்க வாவி தோன்ற,
கள்ளவிழும் மலர்மிக்க கற்பகத் தடியினிலே
துள்ளிநகும் மானென்ன தூயபொன் மலர்க்கூட்டம்
நல்லிளந் தென்றலிலே இன்நடன மாடினவே.

கண்கொட்டு மிடைவிட்டுக் காணத்தகும் ஒளிகக்கும்
விண்தட்டுப் பால்வழியின் விளக்கேற்றும் வெள்ளியன்ன
முன்பட்டுப் பரந்தோடும் முடிவில்லாக் கோட்டினிலே
வெண்பட்டு போன்றமலர் காணும்வளை குடாவழியே
பொன்மொட்டின் மலராடும் பொலிவையே சிறிதுயான்
கண்விட்டுக் கடக்கையிலே கணக்கின்றி யான்கண்டேன்.

ஒட்டிநின்ற ஏரியின்பே ரலைகளும்தா மாடினுமே
தட்டிவிட்ட அப்புகழினி தனித்திருப் பொன்மலர்க்கே;
மட்டிலா வித்தகைய மாபெருங் காட்சிகண்டு
விட்டகலா ரெக்கவியும் மனமகிழா மனதுடனே;
நோக்கினேன் நோக்கினேன் நோகாத மனத்துடனே
போக்கினேன் என்மனதில் பொலிவற்ற எண்ணங்கள்.

சோகமே உருக்கொண்டு சோர்வுற்றுக் கிடக்கும்யான்
தாகமே தனியாது தனியாக அமரவெண்ணின்
அன்றுகண்ட(அ)த் தனிக்காட்சி அழகுமிகும் பொழிவுடனே
இன்றுவந்து என்மனதில் ஒளிர்கின்ற தென்னென்பேன்?
குன்றிவந்த என்மனதும் குதூகலம் மேலிடவே
ஒன்றிணைந்து அம்மலரோ டாடுகின்ற அழகிதுவே.

=> இயற்றிய நாள்: 15.10.1962
(இக்கவிதை 1967-'68 ம் ஆண்டில் மதுரை தியாகராசர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆண்டு மலரில் வெளியானது)

கோடையின் கொடுமை

வந்ததுவே இக்கொடிய கோடையும்
வெந்ததுவே என்மெல்லிய பாதமும்
தின்றதுவே என்கால்களைச் செருப்பும்
நொந்ததுவே என்மனமும் மிகுந்தே.

இப்படிப்பட்ட கோடையின் கொடுமையை
யாரை அழைத்துக் கூறுவேன் யானும்?
ஐயோ இந்தக் கொடுமையை நானும்
அனுபவித் தேனோ ஆண்டினில் என்றும்?

இந்தக் கொடுமை நீடிக்குமானால்
இன்னல் படுவது நானே அன்றி
புவியில் வாழும் யாவரும் ஆதலால்
இரங்க வேண்டுமே இயற்கை அன்னையும்.

=> இயற்றிய நாள்: 25.05.1961.

Tuesday, November 22, 2011

இனிய சோலை

அழகைப் பொழியும் அழியாச் சோலையே,
அன்பை வளர்க்கும் அருமைச் சோலையே,
களைப்பை நீக்கும் கற்பகச் சோலையே,
களிப்பைக் கொடுக்கும் கனிமிகு சோலையே!

உன்னைத் தேடி வந்தவர்க் கெல்லாம்
உவகை யுடனே இடங்கொடுத் திடுவாய்;
அத்தோ டன்றி இளமைத் தென்றலை
அகம் மகிழ்ந்திடவே வீசச் செய்வாய்.

எவரையும் ஒன்றாய்ப் பாவித் திடுவாய்,
எதையும் சமமாய்ப் பகிர்ந்தே தருவாய்,
நுகரா இன்பம் நுகரச் செய்வாய்,
நுன்னிய அறிவைப் பெருகச் செய்வாய்.

உலகில் வாழும் எம்மை எல்லாம்
உவகைக் கடலில் மூழ்கச் செய்து,
உண்மைப் புகழை எய்திட வந்த
இனிய சோலைக்கென் இதய நன்றியே.

=> இயற்றிய நாள்: 02.04.1961
(கவிதை உலகில் புகத் தூண்டிய முதல் கவிதை)

கவிதைப் பயணத்தில் நான் கால்வைத்த வரலாறு

1961.ல் நான் உயர்நிலைப் பள்ளியில் ( ஜோகில்பட்டி அ.வெ.திருப்பதி ரெட்டியார் கழக உயர்நிலைப்பள்ளி-அன்று இராமநாதபுரம் மாவட்டம்-இன்று விருதுநகர் மாவட்டம்) 10-ம் வகுப்பில் பயின்ற நாட்கள். சிற்றப்பா மகன் இரா. நாராயணசாமி (அமரர்/22.11.'08) அருப்புகோட்டை கழக உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது அப்பள்ளியின் ஆண்டுமலரில் அவர்தம் கவிதை ஒன்று வெளியானதைக் கண்டு எழுந்த உந்துதலே என்னையும் கவிதை எழுதச் செய்தது.

தொடக்கத்தில் பிழைகள் காணப்படலாம். எதையும் மாற்றாமல் படைப்புகள் அனைத்தும் படைப்பு காலம் குறிப்பிட்டு அப்படியே தரப்படுகின்றன. அன்றெல்லாம் மரபுக் கவிதைகள்தான் அரங்கேறும் இயல்பு. காலப்போக்கில் கவிதைக்கு இலக்கணம் வேண்டியதில்லை-நயம் இருந்தால் போதும் என்ற நிலை உருவாகி இன்று நயம் கூடிய உரைநடையே "வசன கவிதை" என்ற கவர்ச்சியுடன் பெரும் இடத்தைப் பிடித்து விட்ட நிலையில் நானும் அதில் பயணிக்கத் தொடங்கி விட்டேன். இயல்பில் வசன கவிதையைக் கவிதை என்று கூறலாகாது என்ற நிலையை மாற்றிக் கொண்டு என்னாலும் இதைச் செய்ய முடியும் என்றுணர்த்தும் வகையில் படைப்புகள்சில தரத்துணிந்தேன்.

ஒருசிலர் சுயநலத்தின் உச்சியில் இருந்து கொண்டு எங்கும் தமிழ் காண்போம் எதிலும் தமிழ் காண்போம் என்று கூறிக் கொண்டு, தம் பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் ஆங்கிலத்தில் பெயர் சூட்டி, முதல் தரமான ஆங்கிலப் பள்ளிகளில் அவர்களைச் சேர்த்து ஊருக்கு மட்டும் உபதேசம் செய்து கொண்டு அனைவரையும் முட்டாள்களாக்கி மூன்று தலைமுறைகளை முடக்கி வைத்த பெருமையோடு முன்னனியில் உலா வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் சிறியோனாகிய நானோ ஆர்வத்தின் வடிகாலாக அன்று தொடங்கி இன்றும் தொடரும் என் பணியில் படைத்த மற்றும் படைக்கும் கவிதைக் கனிகளை சற்று சுவைத்துப் பாருங்கள். நிறை கண்டால் போற்றுங்கள். குறை காணில் நயமாகக் கூறுங்கள் திருத்திக் கொள்வேன்.

நாள்: 22.11.2011

போய் வருவோம் விடைதாரீர்



அனுபவத்தில் முதிற்சிபெற்ற ஆசிரியப் பெருந்தகையீர்!
அணுவணுவாய் மாணவர்தம் மனக்கருத்தை உணர்ந்தறிந்து
தினம்தினம்நற் பயிற்சிபெற திரண்டுவந்த நால்வருமே
மனந்திறந்து உமக்களிக்கும் மாசறுநல் மடலிதுவே!

நேற்றுவரை உடனிருந்து உளங்குளிர பகன்ற சொற்கள்
ஊற்றெனத்தான் பாய்ந்தனவே எம்மனதில் இடையின்றி.
தூற்றாது அதனைப்பெருந் துச்சமெனக் கருதாது
ஏற்றோம்யாம் இனிதுடனே எண்கரங்கள் முன்னேந்தி.

வான்றுளிக்கும் மாரிதனைச் செழிப்புடைய கானெனினும்
தானேற்கத் துளியேனும் தயங்காது அதுவன்ன,
தேன்கலந்த அமிழ்தமெனத் தெவிட்டாத தமிழினிலே
யாமளிக்கும் நன்றிசால் வணக்கம்பல ஏற்பீரே.

பிரிந்திடவோ மனமில்லை; பிரியோம்நாம் என்றாலும்
இருந்திடவும் இடமில்லை எவரிடம்போய் என்சொல்வோம்?
விருந்தொன்று நமைப்பிரித்து வேறெங்கும் விரட்டிடினும்
இருந்திடுவோம் ஒருங்கிணைந்து உளமதிலே ஒளிவீசி.

அன்றுமுதல் இன்றுவரை அறிந்துமறி யாமலுமே
ஒன்றிரண்டு சொற்குற்றம் சொல்லடுத்த செயற்குற்றம்
என்றேதும் கண்டிருப்பின் எண்ணமதில் கொள்ளாமல்
இன்றேநீர் பொருத்தருள்வீர் போய்வருவோம் விடதாரீர்.

=> 23.11.'67
அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் நிறைவு நாள் விழாவில் வாசிக்கப்பட்ட து.