Friday, January 10, 2014

எண்ணங்கள் நலமெனில் எல்லாம் நலமாகும்




சங்கம் வளர்த்த மாமதுரை நகர்ப்புறம் கிழக்கில்
சிங்காரச் சீமையாம் சிவகங்கைச் சாலையில்- இன்று
அங்கயற் கன்னிகளாய் விடுதியில் தங்கிப் பயிலும்
நங்கைகள் நிறைந்ததொரு செவிலியர் கல்லூரியில்- தமிழர்  
திங்களாம் தைத்திரு நாள்நினைந்து, பொங்கி மகிழும் மாணவியருக்கு
பொங்கல் வாழ்த்து முன்னதாய்ச் சொல்லி மகிழ்வேன்.

இங்குநான் தொடுக்கப் போவது வெறும் வியல்ல;
செங்கரும்பு தழைக்க எண்ணி விதைக்கும் விதையுமல்ல.
இங்கிதமாய் கவியும் விதையும் இணைந்த கவிதைதான் இது.
சங்கப்பலகை இங்கில்லை கவிதையின் தரமளக்க;
இங்குரைக்கும் கவிதையில் குற்றம்காண நக்கீரனுமில்லை-எனினும்
எங்கும்சிறு குற்றமின்றி அஞ்சி அவையடங்கி கவிதை படைப்பேன்.
 
புத்தாண்டு பிறக்குமெனில் புத்துணர்வு பொங்க வேண்டும் – இதை
எத்தனைபேர் எடுத்துச் சொல்லியும் செவிமடுக்க ஆளில்லை. 
சத்தான உணவெல்லாம் தவிர்த்து விட்டோம் - நம்முள்
அத்துனை நோய்களையும் வளர்த்து விட்டோம்.
அத்தனையும் சேர்த்துநம் புத்துணர்வை துறந்து விட்டோம்;
சித்தமெல்லாம் கலங்குதே இதைநான் யாரிடம் சொல்வேன்?

நோய்கள் என்றும் தானாய் வாரா – நாமேதான்
பாய்ந்து சந்திரமுகியாய் நோய்களை வாவாவென்று வரவேற்கின்றோம். 
காய்ந்துபோன உணவோடு கடைத்தெரு பலகாரமென
மேய்ந்தால் நோய்கள் நம்மைத் தீண்டும்தானே.
சாய்ந்தும் சற்று ஓய்வெடுக்க வேண்டும்தான் - ஆனாலும்
ஓய்ந்தநிலை மாற்றி உடல்நோக உழைப்பும் வேண்டும்.

ஆண்டுத் தொடக்கத்தில் நல்லவை நான்கு சொல்லி
கூண்டுக் கிளியாய் இங்கு கூவிட வந்தேன் கேளீர்.
வேண்டுவன அனைத்தும் விரைந்து செய்து,
வேண்டாத நினைவுகள் வேறறுத்து, வெளிக் கொணர்ந்து,
தோண்டி மண்ணில் புதைத்து, தூயமனம் பெறலாம்-  மெல்ல
மீண்டும் அவை முளைக்காமல் முழுக்கவனம் தரலாமே.

மனதிற்கும் ஒன்று சொல்வேன் தெளிவாக – நாளும்
மனஅழுத்தம் மற்றும் மனஇருக்கமென நாமே படைத்து,
தினம்தினம் நொந்து நூலாகி, நற்செயல்கள் பாழாகி,
குணம்மாறி, கூனிக் குறுகி, கைமடக்கி, கால்முடக்கி,
இனம்காண முடியாத துயரங்கள் பலகூட்டி – செய்த
வினைதான் என்றெண்ணி வாளாவிருந்தால் வாழமுடியுமா?

என்னதான் செய்யவென கேளுங்கள் சொல்வேன் சில.
என்தலை எழுத்தென்று எண்ணாதீர் அப்படி ஏதுமில்லை.
எண்ணங்கள் நலமெனில் எல்லாமே நலமாகும் - இதை
திண்ணமாய் நம்புங்கள் வாழ்வில் வளம் பெருகும்.   
சொன்னவை சொன்னபடி நடக்கும்; சொல்லேதும் பிறழாது;
பொன்னான வாழ்வுபெற இதுவே தாரகை மந்திரம்.

தூய்மை மனதில் வேண்டும் உடலில் அல்ல- என்றும்
வாய்மையே வெல்லுமென மனதில் உறுதியுடன்  
தாய்மை உள்ளங் கொண்டு தம்பணியில் மெருகூட்டி,
ஓய்வைப் புறந்தள்ளி, ஒருமனதாய் உழைப்பைக் கூட்டி-எதையும்
ஆய்வு செய்து தீர்வு காணும் நம்அருமை முதல்வரை
வாயாரப் புகழ்ந்திடவோ சொற்கள் காணேன்.      

நமக்கிரண்டு சொன்னாலென்ன குறைந்தா போகுமென்று -இங்கு
அமர்க்களமின்றி அமர்ந்திருக்கும் ஆசிரியை மற்றும் அலுவலர்களே!
உமக்கென்ன சொன்னால் தகுமென சிந்தித்தேன் – சொல்லவா?
சுமக்கும் சுமைகள் செவிலியர்; சுமைதாங்கும் நாமெல்லாம் தூண்கள்.
நமக்கெல்லாம் மேற்கூரை நம்நிறுவனரே –ஆனாலும்
சுமக்கும் தூண்கள் பெரிதா? குடையாகத் திகழும் மேற்கூரை பெரிதா?

ஆஹா! நாரதர் கேட்கும் கேள்வியாய்ப் படுகிறதா? –உடன்
வேகாத வெய்யிலில் வெளியேறி ஓடவேண்டாம் – நில்லுங்கள்.
ஆகாய வழிவந்த நாரதனுமல்ல நாராயணனும் அல்லநான்.
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டென்ற குறள்வரி அறிந்து,
நாகாத்து நயமாய் உங்களில் ஒருவனாய் -மனம் 
நோகாத நல்லதொரு கருத்தைச் சொல்வேன் அமருங்கள்.

நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை- இது காதல் கவிதை;
தாயின்றி சேயில்லை சேயின்றி தாயில்லை- இது பாசக் கவிதை.
ஆயினும் தலைமைக்கும் தொண்டுக்கும் போட்டி இங்கு.
காய்நகர்த்தி சீர்தூக்கிப் பார்த்து கருத்துள்ள பதில் தந்தேன்.
வாய்மையில் தூண்களின்றி கட்டிடம் கட்டலாம் –ஆனால்
சாயாத வலுவானாலும் தூண்கள் மட்டும் கட்டிடம் ஆகாது.   

சரியாகச் சொன்னால் தூண்கள் நாமானோம் நிறுவனர்நம் குடையானார்;
விரிவாகச் சொன்னால் கல்லூரி முதல்வர்நம் நிழலானார்.
புரியாத புதிராய் குழந்தையாய் இன்று நாற்பத்தெட்டில் பயணமான  
திரிலோக சங்கராம் நம்நிறுவனர் கல்விச் சேவைக்கு வாழ்த்துகூறி
சிறியதோர் அன்பின் சின்னமாய் அன்னாரின் பிறந்தநாளில்- நினைவுப்
பரிசொன்றை வழங்கினோம்; அன்போடு ஏற்கப் பணிந்தோம்.
வாழ்க வளமுடன்! வெல்க அன்னார் கல்விச் சேவை. 
                            * * *
10.01.2014 அன்று RASS செவிலிய்ர் கல்லூரி மாணவியர் கொண்டாடிய தைப்பொங்கல் விழாவில் வாசிக்கப் பட்டது.

Tuesday, January 7, 2014

நிறுவனரின் பெருமை பாடி நாம் பெருமை அடைவோம்



தோன்றின் புகழொடு தோன்றுகஇவை
வள்ளுவன் மொழிந்த சொற்கள்.
இதன்பொருள் நீரன்றி யானுமறிவேன் - என்றாலும்
வள்ளுவன் சொல்லில் வலிமை இல்லையென்பேன்.

இஃதென்ன புதிர் போடுகிறார் என்பார் சிலர் - இவர்
எதையோ எண்ணி புலம்புகிறார் என்பார் இன்னும் சிலர்.
இதோ விளங்கச் சொல்வேன் கேளுங்கள்ஒருகணம்
சிந்தித்து உள்ளதைக் கூறுங்கள்.

பிறக்கும் போதே புகழொடு பிறவாய் என்றால்
கருவில் உள்ள குழந்தைக்கு என்ன தெரியும்? - அவ்வழியே
பிறவியில் புகழொடு பிறந்தாலும் அதை
இறுதிவரை காப்பதும் பெரும் சுமையன்றோ.

இன்றுநாம் கைகோர்த்துக் கூடியமர்ந்து வாயார
பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அழைத்த நாயகர் 
புகழொடு தோன்றியவரா அல்லது புகழ் சேர்த்தவரா? தொடுக்கும்
கேள்விகள் புதிரா அல்லது புத்தி தடுமாற்றமா?

நயமாக நான் சொல்வேன்என் சொற்கள்
புதிருமல்ல புத்தி தடுமாற்றமும் அல்ல.
பொருளில் ஆழப்புகுந்து அலசிப் பார்த்தேன்நன்கு
உணர்ந்துதான் இக்கேள்விகள் தொடுத்தேன்.

புகழொடு தோன்றினாரெனில் பெருமை தாய் தந்தைக்கு;
பிறந்தபின் புகழென்றால் அதுநம் நாயகருக்கே.
நாமறிந்த மட்டும் பெருமை பின்னவர்க்கே எனலாம்ஆயினும்
தாய் தந்தையர் ஊக்கமும் ஆக்கமும் இமையத்திலும் உயர்ந்தது.

நாயகராய் இங்கு அமர வைத்து - அமரும்
இருக்கைக்கும் அழகு சேர்த்து
வாயாரப் புகழ்பாடி வாழ்த்துக்கள் பலகூற
நம்மவர்க்கே சாலப் பொருந்தும் என்பேன்.

புகழொடு பிறக்கும் வித்தை அறியாத நம்நாயகர்
பிறந்து வளர்ந்து பிறர்போற்றும் வண்ணம்                                 
நாடு நமக்கென்ன செய்ததென எண்ணாமல்
நாட்டிற்கு நாமென்ன செய்தோமென எண்ணினாரோ?

ஒன்று செய்தால் போதும்அதையும்
நன்று செய்தால் நல்லதுவிரும்பி
இன்றே செய்தால் இன்னும் நல்லதென
எண்ணித் துணிந்து ஓராயிரம் செய்து விட்டார்.

அன்ன சத்திரம் ஆயிரம் தொட்டாலும் ஆங்கொரு
அறிவுப் பூங்காவை அமைத்து விட்டால்
அதுதான் பெருமையிலும் பெருமை என்பேன்இதைத்தான்
நம்நாயகர் செய்துள்ளார் வாயாரப் புகழ்வோம் வாரீர்.

உயிர் காக்கும் உன்னதக் கல்வி புகட்டும்
செவிலியர் கல்லூரி தொடங்கி
போட்டிகள் மிகுந்த உலகில் எதிர்நீச்சல் போட்டு
சொந்த முயற்சியால் வெற்றிக்கொடி நாட்டினார்.

வரலாற்றில் ஒரு இங்கர்சால்இன்றுநம்
கண்முன் ஒரு சங்கர்(லால்) - வாழ்வின்
தத்துவமறிந்து தனித்துநின்று சாதனை படைத்தார்;
பெரும்புகழைத் தானே சேர்த்தார் – எனவே

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்றென்பது ஏற்புடையதா? - இங்கு
நேரில் வாதாட வள்ளுவன் இல்லையேஇருந்தால்
வரிகளை மாற்றுங்கள் எனலாம் - ஆனாலும் 

நமக்கேன் வீண்வம்பு? வாழ்க வள்ளுவன் புலமை!
இன்றிங்கே நம்மில் ஒருவராய் வலம்வந்து
அன்பு, அடக்கம், இனியசொல், இன்முகம் கொண்டநம் நிறுவனரின்
பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்வோம்.

அவர்தம் பெருமைபாடி, பொன்னாடை போர்த்தி,
பரிசளித்து நாமும் பெருமிதம் கொள்வோம்.
வாழ்க பல்லாண்டு. வளர்க அவர்தம் தொண்டு!
ஆலவிழுதாய் அணைத்து நின்று அன்னவர் நிழழில்  
நாமும் சுகம் காண்போம்; வளம் பெறுவோம் வாரீர்!
                                (10.01.2012)