Monday, January 30, 2017

எண்ணும் எழுத்தும் தமிழின் கண்கள் (3)



   எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
           நம்மிரு கண்கள் ஆனாலும்
   கண்கள் இரண்டை படைத்த இறைவன்
              காரணம் சொல்ல மறந்தானே.
   எண்ணிப் பார்த்து இதன் பொருளும்
          யாதெனக் கேட்டேன் வள்ளுவனை.
   எண்ணும் எழுத்தும் இணைந்து நம்மிரு
         கண்கள் என்பது சரியென்றான்.

   ஏணிப் படிகள் எண்ணிடவே கஉவென
       எண்கள் உண்டு நம்தமிழில்.
   காணி குறுணி குழியுடன் நாழிகை 
       என்பன எல்லாம் தமிழ்மரபே.
   கோணிப் பையில் தானியம் அளக்க
      மரக்கால் படியும் தமிழ்அளவே.
   கேணியின் வட்டப் பரப்பு கணக்கிட
        சூத்திரம் உண்டு நம்தமிழில்.

   எழுத்தில் பிறந்தது தமிழென்றால் வெறும்
            வடிவம் மட்டும் பொருளல்ல.
   முழுக்க இணைந்து இலக்கண இலக்கியம்
            வளமது பெருகும் எழுத்தாலே.
   பழுத்த அனுபவம் பெறுவதற் கென்றே
            படைப்புகள் தமிழில் ஏராளம்.
   அழுத்தம் மிகுந்தே எண்ணும் எழுத்தும்
            தமிழின்இரு கண்கள் தானென்போம்.

எண்ணும் எழுத்தும் தமிழின் கண்கள் (2)



   மண்ணில் வாழும் உயிர்களுக்கு இரு
         கண்கள் கொடுத்தான் பேரிறைவன்.
   கண்கள் இரண்டு ஏனென்றேன் அவன்
         வள்ளுவனிடம் போய் கேளென்றான்.
   வின்னவர் ஆன வள்ளுவன் என்முன்
         குறளதிகாரம் நாற்பதைத் திறந்தான்.
   எண்ணும் எழுத்தும் இணைந்து வருவதை     
         கண்கள் இரண்டுடன் ஒப்பிட்டான்.

   எண் என்றால் வெறும் எண்ணல்ல
        எண்கள் படைக்கும் கணக்கென்றான்.           
   எண்ணிய நாழிகள் எட்டுக்கு ஒருகுறுணி,
        உழக்கில் பாதி ஆழாக்கு,
   பின்னர் அதிலும் பாதி மாகாணி
        என்பன தமிழில் கணக்காகி 
   இன்னும் காணி குண்டு குழியெனவே
        கணக்கிடும் அளவுகள் ஆயிரமே.        
  
   எழுத்தென்றால் வெறும் எழுத்தல்ல தமிழில்
          இலக்கணம் இலக்கியம் தானென்போம்.
     பழுத்தநற் புலவன் வள்ளுவன் இதையும்
          இலைமறை காயாய் சொன்னானே.
     எழுத்தறி வித்தவன் இறைவன் எனினும்  
        ஏட்டில் படைத்தவன் வள்ளுவன்தானே.
     மழுப்பல் வேண்டாம் எண்ணும் எழுத்தும்
         தமிழின் கண்கள் தானென்போம்.

Sunday, January 15, 2017

எண்ணும் எழுத்தும் தமிழின் கண்கள் (1)




எண்ணென்ப ஏனைபிற எழுத்தென்ப இவ்விரண்டும்
       கண்ணென்ப வாழுகின்ற உயிர்க்கென்று
எண்ணியதைத் தின்னமுடன் வள்ளுவனே சொன்னாலும்
       ஏனென்றும் கேட்கத்தான் தோனுதையா.
கண்ணிரண்டில் ஒருகண்ணே இல்லையெனில் உன்நிலையும்
       என்னவாகும் எண்ணித்தான் பாருமையா.
கண்ணொன்று இல்லையெனில் அஃதுனக்கு ஊனம்தான்
       உன்நிலைபரி தாபந்தான் நீயுணர்வாய்!. 

மொழியொன்று வளர்வதற்கு எழுத்தறிவு போதுமென
       தெளிவின்றி யாரென்ன சொன்னாலும் 
பழியொன்று வருமுன்னர் எண்ணறிவும் தேவைதான்
        என்பதையும் திடமுடனே ஏற்றிடலாம்.
விழியுயர்த்தி வியப்புடனே பார்த்திடத் தோன்றினாலும்
        இதுமுற்றும் உண்மையாம் நீயறிவாய்.
மொழிகளின் வரிசையிலே தமிழுக்குச் சிறப்பாக   
        எழுத்தோடு எண்களுமே ஏற்றிடுவாய்!.

நம்தமிழின் நிலையென்ன என்றேநாம் சிந்தித்தால்
       உண்மைநிலை புரியவரும் மகிழ்வாய்நீ.
 செந்தமிழாம் நந்தமிழில் எழுத்துக்கள் சீர்பெற்று
       இலக்கியத்தில் வளம் கண்டோம்.
 சிந்தனையில் எண்களுமே சேர்ந்தின்று சூத்திரங்கள்
       பங்கெடுக்கும் பாங்கினையும் நாமறிவோம்.
 மந்திரமோ இதிலில்லை எண்ணொடு எழுத்தொன்றி
       நம்மிருகண் போலாகி நலம்பெறுவோம்.

நூறாண்டு வாழ்கஎம் குலவிளக்கே



வாழ்க பல்லாண்டு வளமெல்லாம் பலபெற்று என்றேதான்
நாளெல்லாம் எமைவாழ்த்தி ஏற்றம்தான் நீர்கண்டீர் எம்மானே.
இன்றுநீர் அகவை எண்பதை முடித்து அன்றாடப் பணிகளை
நன்றே முடித்து குன்றில்மேல் ஒளிரும் குலவிளக்காய் திகழ்கின்றீர்.

இத்தருணம் நானும்மை வாழ்த்திட வயதெனக்குப் போதாது என்றேதான்
சித்தம் தெளிவுடன் சிரம்தாழ்த்தி நான்உங்கள் ஆசிகள் பெறவந்தேன்.
தத்துவம் பேசவில்லை தப்பேதும் கூறவில்லை தலைவணங்கி சொல்லிடுவேன்
நித்தமும் உம்சொல்லால் நானுயர்வேன் என்வாழ்வில் ஏற்றம் பலபெற்று.

குலவிளக்கே, நூறாண்டு நீர்வாழ்க நலமும் வளமும் பெற்று
நிலவாய் ஒளிர்ந்து எனைவாழ்த்தி ஆசிகள் வழங்கிட வேண்டுகிறேன்.