Sunday, January 15, 2017

பெண்கள் இந்நாட்டின் கண்கள்



பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்பார்
      ஆனால் இதுவும் கொஞ்சம் வாயளவே.
அன்னை பராசக்தி வடிவம் என்பார்
      ஆற்றுத் தண்ணீரில் எழுதியே வைப்பார்.

என்னைக் காக்கும் தெய்வம் என்பார்
      வீட்டில் தினமும் திட்டித் தீர்ப்பார்.
சொன்னதை கொஞ்சம் கேட்க மறுத்தால்
       சட்டென காலால் எட்டி உதைப்பார்.

எண்ணிப் பார்த்தால் பெண்கள் நிலையோ
      ஏட்டிக்கு போட்டி சாட்டை அடிதான்.
திண்ணைப் பேச்சு எம்மிடம் இல்லை
      தொலைக்காட்சி தொடர்கள் துணை இருக்கே.
     
போதும் போதும் புகழ்ச்சியும் புலப்பமும்
     மீதி இருந்தால் நாளை பார்ப்போம்.
சூதும் வாதும் நமக்கினி வேண்டாம்
      சொல்ல நினைத்தேன் சொல்லி விட்டேன்.
    
இல்லப் பணிகள் ஏராளம் என்பேன்
     அலுவலகப் பணிகள் தாராளம் என்பேன்.
செல்லப் பிள்ளைகள் சேர்ந்து விட்டாலோ
     அல்லும் பகலும் ஓய்வே இல்லை.

வேதியல் முறையில் பெண்களை இனியும்
    பகுப்பாய்வு ஏதும் செய்திடல் வேண்டாம்.
நீதி வழுவாமல் நிஜத்தைப் பேசலாம்
    ஜாதியில் ஆண்பெண் பிரிவைத் தவிர்ப்போம்.

பெண்கள் எதிலும் சளைத்தவர் அல்ல
     முன்பின் பார்த்து பேசுவோம் இனிநாம்.
தன்நிகர் இல்லா தமிழகம் படைப்போம்
      இல்லப் பணிகள் இணைந்தே செய்வோம்.

அன்று பாரதி சொன்னார் என்றெல்லாம்
      வீரவசனம் ஏதும் வேண்டாம் கேளுங்கள்.
இன்று தேவையறிந்து சேவைகள் செய்வோம் 

            பாரததேசம் புகழுயர சபதம் எடுப்போம்.

No comments:

Post a Comment