Sunday, January 15, 2017

எண்ணும் எழுத்தும் தமிழின் கண்கள் (1)




எண்ணென்ப ஏனைபிற எழுத்தென்ப இவ்விரண்டும்
       கண்ணென்ப வாழுகின்ற உயிர்க்கென்று
எண்ணியதைத் தின்னமுடன் வள்ளுவனே சொன்னாலும்
       ஏனென்றும் கேட்கத்தான் தோனுதையா.
கண்ணிரண்டில் ஒருகண்ணே இல்லையெனில் உன்நிலையும்
       என்னவாகும் எண்ணித்தான் பாருமையா.
கண்ணொன்று இல்லையெனில் அஃதுனக்கு ஊனம்தான்
       உன்நிலைபரி தாபந்தான் நீயுணர்வாய்!. 

மொழியொன்று வளர்வதற்கு எழுத்தறிவு போதுமென
       தெளிவின்றி யாரென்ன சொன்னாலும் 
பழியொன்று வருமுன்னர் எண்ணறிவும் தேவைதான்
        என்பதையும் திடமுடனே ஏற்றிடலாம்.
விழியுயர்த்தி வியப்புடனே பார்த்திடத் தோன்றினாலும்
        இதுமுற்றும் உண்மையாம் நீயறிவாய்.
மொழிகளின் வரிசையிலே தமிழுக்குச் சிறப்பாக   
        எழுத்தோடு எண்களுமே ஏற்றிடுவாய்!.

நம்தமிழின் நிலையென்ன என்றேநாம் சிந்தித்தால்
       உண்மைநிலை புரியவரும் மகிழ்வாய்நீ.
 செந்தமிழாம் நந்தமிழில் எழுத்துக்கள் சீர்பெற்று
       இலக்கியத்தில் வளம் கண்டோம்.
 சிந்தனையில் எண்களுமே சேர்ந்தின்று சூத்திரங்கள்
       பங்கெடுக்கும் பாங்கினையும் நாமறிவோம்.
 மந்திரமோ இதிலில்லை எண்ணொடு எழுத்தொன்றி
       நம்மிருகண் போலாகி நலம்பெறுவோம்.

No comments:

Post a Comment